கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தனக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாகவும் , குற்றவாளிகளுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்க வேண்டும் என்று அ ம மு கட்சியின் நிறுவனப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் .
இந்த சம்பவம் தொடர்பாக தனது x தளத்தில் ” கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான துயரம் – விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீதும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் தேசிய மாணவர் படை (NCC) எனும் பெயரில் நடைபெற்ற போலி முகாமில் பங்கேற்ற 12 வயது மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

பாதிக்கபட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், முக்கிய குற்றவாளியான நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் என்பவருக்கும் தேசிய மாணவர் படை(NCC)க்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதும் அவர் போலி பயிற்சியாளர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொஞ்சம் இதையும் படிங்க :https://thenewscollect.com/krishnagiri-minor-girl-rape-case-naam-tamilar-party-ex-executive-arrested/
தேசிய மாணவர் படை முகாம் எனும் பெயரில் போலி முகாம்களை நடத்தி அதன் மூலம் பள்ளி மாணவியை வன்கொடுமைக்குள்ளாக்கிய சிவராமன் என்பவருக்கு, தனியார் பள்ளியில் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் என பலர் உடந்தையாக இருந்திருப்பது பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கில் விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, வரும்காலங்களில் இதுபோன்ற போலி முகாம்கள் நடைபெறா வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று பதிவு செய்துள்ளார் .