தஞ்சையில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் ஆலயத்தில் ஐப்பசி மாதம் அமாவாசையை முன்னிட்டு பெண்கள் நீண்ட வரிசையில் நின்று கேதார கெளரி பூஜை செய்து வழிப்பட்டனர். ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் ஆலயத்தில் கேதார கெளரி நோன்பு எடுத்து ஏராளமான பெண்கள் வழிபாடு.
தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான அமாவாசை தினத்தன்று கேதார கௌரி நோன்பு எடுத்து பெண்கள் வழிபடுவது வழக்கம். குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகவும், கணவன், மனைவி இடையே ஒற்றுமை நிலவவும் கேதார கவுரி நோன்பு எடுத்து பெண்கள் வழிபட்டு வருகின்றனர். அதன்படி, தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான அமாவாசை தினமான இன்று பல்வேறு கோயில்களிலும் கேதார கௌரி நோன்பு எடுக்கும் வழிபாட்டில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து, மாங்கல்ய பலம் பெருக, திருமணம் தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க தஞ்சை எல்லையம்மன் கோவில் சாலையில் அமைந்துள்ள இந்து சமய அறநிலைதுறைக்கு சொந்தமான அருள்மிகு.ரேணுகா தேவி அம்மனை வேண்டி வழிப்பட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பெண்களின் நம்பிக்கை. இதற்காக, பெண்கள் புரட்டாசி மாதம் தசமி திதியில் இருந்து ஐப்பசி மாதம் அமாவாசை வரை 21 நாட்கள் விரதம் மேற்கொள்வார்கள் இதற்கு கேதார கெளரி விரதம் என சொல்லப்படுகிறது.
தஞ்சையில் ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் ஆலயத்தில்அமாவாசையான இன்று பெண்கள் பெரிய தாம்பூல தட்டில் 21 வாழை பழம், 21 வெற்றிலை பாக்கு, 21 பனியாரம், தேங்காய், பூ. வில்வ இலை ஆகிய பொருட்களை யார் பார்வையிலும் படாமல் மூடி கோவிலுக்கு எடுத்து வந்தனர். கோவில் தென்புறம் அமைந்துள்ள நாக கன்னிகள் சிலைகளுக்கு மஞ்சள் பூசி, குங்கும் இட்டு தீபம் ஏற்றி கேதார கெளரி பூஜை செய்து வழிப்பட்டனர்.

பின்னர் கோவிலை வலம் வந்த பெண்கள் சந்தன காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளித்த ஸ்ரீ ரேணுகாதேவி அம்மனை நீண்ட வரிசையில் காத்து நின்று வணங்கி சென்றனர். கேதார கௌரி பூஜை தஞ்சை மாவட்டத்திலேயே இந்த ஆலயத்தில் மட்டுமே நடைபெறுகிறது. இந்த பூஜையில் கலந்துகொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெண்கள் வந்து வழிப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.