- பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரை அலறவிட்ட கட்டுவிரியன் பாம்பு. ஊழியர்களை அலறவிட்ட லஞ்சஒழிப்பு போலீசாரை தெறிக்கவிட்ட கட்டுவிரியன் பாம்பு. கணக்கில் வராத சுமார் 2லட்ச ரூபாய் பணம் பறிமுதல் என தகவல்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சார் பதிவாளர் அலுவலக ஊழியர்கள், பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் என அனைவரையும் அலுவலக வளாகத்திற்குள் வைத்து அலுவலக கிரில் கேட்டை உள்பக்கமாக பூட்டி தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் கையில் வைத்திருந்த கணக்கில் வராத பணத்தை அலுவலக மதில் சுவர் மீது வீசி எறிய அதனை அதிகாரிகள் கைப்பற்றி பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் பத்திரப் பதிவு செய்ய வந்தவர்களிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். பொதுமக்களை விசாரணைக்கு பிறகு சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வெளியே அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் பத்திரப்பதிவு தொடர்பான கணக்கு வழக்குகளை பார்த்து விசாரணை நடத்தினர். அப்போது சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் கட்டுவிரியன் பாம்பு ஒன்று புகுந்ததால் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அலறியடித்து சிதறினர். அங்கிருந்த கோப்புகளையும் பிளாஸ்டிக் டப்பாவையும் தூக்கி கட்டுவிரியன் பாம்பு மீது போட்டு அடித்து பாம்பை கொலை செய்ய முயற்சித்தனர். செய்தியாளர்கள் அதனை காட்சிப்படுத்த முற்பட்ட போது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பாய்ந்து விடுமோ என அஞ்சி உடனடியாக ஓடிவந்து கதவை தாழிட்டுக் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் ஒரு வழியாக பாம்பை அடித்து செய்தியாளர்கள் படம் பிடிக்காத வகையில் மாற்று ஜன்னல் வழியே வெளியே வீசி அப்புறப்படுத்தினர்.
ரெய்டு என்ற பெயரில் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களை அலறவிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரையே கட்டுவிரியன் பாம்பு சிறிது நேரம் தெறிக்கவிட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத சுமார் 2லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அலுவலகத்தில் இருந்து பல முக்கிய ஆவணங்களும், கோப்புகளும் சிக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.