காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாவலூர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மர்ம நபர்கள் சிலர் இளைஞர் ஒருவரை சில நாட்களாக கொலை செய்ய சதி திட்டம் தீட்டுவதாக மணிமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
போலீசார் அப்பகுதியில் தீவிரமாக கண்காணித்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது அந்த பகுதியில் கத்தி வீச்சருவாள் பயங்கர ஆயுதங்களுடன் அடர்ந்த காட்டுப் பகுதியில் தலைமறைவாக இருந்த நாவலூர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த வினோத் , பார்த்திபன் , சுரேஷ் ,குகன்,பிரேம்குமார் உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை செய்ததில் அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரை கொலை செய்ய திட்டம் தீட்டியது போலீசாருக்கு தெரிய வந்தது.அதேபோன்று போலீசார் தொடர்ந்து விசாரணை செய்ததில் ஐந்து பேரும் பல்வேறு இடங்களில் கத்தி முனையில் பொதுமக்களை மிரட்டி செல்போன், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்ததும் போலீசருக்கு தெரிய வந்துள்ளது.
மேலும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களிடமிருந்து ஐந்து பயங்கர கத்திகள், இரண்டு இரு சக்கர வாகனம் போன்றவற்றை பறிமுதல் செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.