கல்வராயன்மலை மலையரசம்பட்டு என்னும் கிராமத்தில் தனது வீட்டின் பின்புறத்தில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கப்பெறும் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் கடந்த ஆண்டு 26.2.2021 அன்று விழுப்புரம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், அக்கிராமத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது சடையன் (வயது 55) என்பவரின் வீட்டின் பின்புறம் கஞ்சா செடிகள் வளர்த்து வந்தது அதை விற்பனையும் செய்யப்பட்டதையும் போலீசார் கண்டுபிடித்தனர் . மேலும் அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு 20 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில், சடையன் கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததும், அந்த கஞ்சாவை பொட்டலங்களாக போட்டு அவருடைய கூட்டாளியான துரூர் கிராமத்தை சேர்ந்த ஆண்டி என்பவரும் கல்வராயன்மலை பகுதியில் அமோகமாக விருப்பனைசெய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சடையன், ஆண்டி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.2 லட்சத்து மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார், விழுப்புரம் போதைப்பொருட்கள் மற்றும் மனமயக்கும் உளசார்புள்ள பொருட்கள் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி தேன்மொழி, குற்றம் சாட்டப்பட்ட சடையனுக்கு கஞ்சா செடிகள் வளர்த்து விற்பனை செய்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், இவருக்கு உடந்தையாக இருந்து கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக ஆண்டிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும்,மேலும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தேன்மொழி தீர்ப்பு வழங்கினார் .