ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு பதிலாக, அம்மாநிலத்தில் உள்ள தவுபால் பகுதியில் உள்ள ஒரு தனியார் மைதானத்தில் இருந்து நாளை (14ம் தேதி) தொடங்கும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 14 ஆம் தேதி மணிப்பூர் மாநிலம் இம்பாலில் இருந்து இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை ராகுல் தொடங்க படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பை காரணம் காட்டி யாத்திரைக்கு அனுமதி தருவதில் மாநில பாஜ அரசு இழுத்தடித்தது.

இந்நிலையில், அந்த மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கெய்ஷாம் மேக்சந்திரா நேற்று நிருபர்களிடம் கூறியது, இம்பாலில் உள்ள ஹப்தா கங்ஜெய்பங் மைதானத்தில் இருந்து பேரணி துவங்குவதற்கு கடந்த 2ம் தேதி அனுமதி கேட்டிருந்தோம்.10ம் தேதி பாஜ முதல்வரான பிரேன் சிங்கையும் சந்தித்து இதுபற்றி கோரிக்கை விடுத்தோம். இந்த நிலையில், அன்று இரவு இதற்கு அனுமதி அளித்த மாநில அரசு பல நிபந்தனைகளை விதிக்க பட்டது. இதையடுத்து தலைமை செயலாளர் வினித் ஜோஷியை சந்தித்து பேசினோம். அப்போது இம்பால் பேரணி துவங்கும் நிகழ்ச்சியில் 1000 பேர் வரை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அனுமதி கிடைக்காததால் கடைசி நேரத்தில் சிக்கலான நிலை ஏற்பட்டது. நேற்று முன்தினம் தவுபால் மாவட்டத்தில் உள்ள கோங்ஜாமில் உள்ள தனியார் இடத்தில் யாத்திரை துவக்க விழா நடத்த துணை ஆணையர் அனுமதி அளித்தார். இதனால், இம்பாலில் இருந்து 34 கிமீ-க்கு அப்பால் உள்ள தவுபாலில் இருந்து யாத்திரை தொடங்க முடிவெடுத்துள்ளோம். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே யாத்திரையை கொடியசைத்து துவங்குவார் எனக் கூறப்பட்டது. யாத்திரை துவங்கும் இடம்தான் மாற்றப்பட்டுள்ளது. மணிப்பூரில் இருந்து யாத்திரை செல்லும் இதர இடங்கள் தொடர்பில் எந்த மாற்றமும் இல்லை. தவுபாலில் 14ம் தேதி துவங்கும் யாத்திரை வரும் மார்ச் 20ம் தேதி மும்பையில் முடிவடையும். இவ்வாறு அவர் கூறினார்.