இளநிலைப் பொறியாளர் (சிவில், மெக்கானிக்கல் & எலக்ட்ரிக்கல்) தேர்வு, 2024-க்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் மார்ச் 28, 2024 அன்று வெளியிட்டுள்ளது. இந்தத் திறந்த போட்டித் தேர்வானது மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்கள் / அலுவலகங்களில் இளநிலைப் பொறியாளர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் பதவிகள் 7-வது மத்திய ஊதியக் குழுவின் நிலை-6 (ரூ. 35,400- 1,12,400/-) உடன் தொடர்புடைய ஊதிய அளவுடன் குரூப் ‘பி’ (அரசிதழ் அல்லாத), அமைச்சகம் அல்லாத பிரிவின் கீழ் வருகின்றன.
இந்தத் தேர்வுக்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். பதவிகள், தற்காலிக காலியிடங்கள், வயது வரம்பு, அத்தியாவசிய கல்வித் தகுதிகள், கட்டண அமைப்பு, தேர்வு முறை, விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான தகவல்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை பணியாளர் தேர்வாணைய அதிகாரப்பூர்வ இணையதளம் (https://ssc.gov.in) மூலம் மட்டுமே ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 18, 2024, இரவு 11:00 மணி வரை.
தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு ஜூன் 4, 2024 முதல் ஜூன் 6, 2024 வரை நடைபெற உள்ளது. ஆந்திராவில் 10 மையங்கள், புதுச்சேரியில் 01 மையம், தமிழ்நாட்டில் 07 மையங்கள் தெலுங்கானாவில் 03 மையங்கள் என 21 மையங்கள் / நகரங்களில் தேர்வு நடத்தப்படும்.