மூத்த வழக்கறிஞரிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்ட நீதிபதி : வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் தலைமை நீதிபதியிடம் புகார்.!

2 Min Read
  • வழக்கு விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் பி வில்சனிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்ட நீதிபதி ஆர் சுப்பிரமணியனுக்கு எதிராக வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், சமீபத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, மூத்த வழக்கறிஞர் பி வில்சனிடம் நீதிபதி ஆர் சுப்பிரமணியன் கடுமையாக பேசிய வீடியோ காட்சிகள் வைரலாகி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளித்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image
 

அந்த மனுவில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், மூத்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், மூத்த வழக்கறிஞர் மற்றும் வழக்கில் ஆஜரான வழக்கறிஞரை நோக்கி கண்ணிய குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.    சம்பந்தப்பட்ட நீதிபதி, மற்ற வழக்கறிஞர்கள் மீதும், வழக்கு தொடுத்தவர்களுக்கு எதிராகவும் அடிக்கடி இதுபோல வார்த்தைகளை பயன்படுத்துகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணைக் காட்சிகளை பதிவு செய்து வெளியிட தடை செய்யப்பட்ட நிலையில் , இந்த வீடியோ காட்சிகள் எப்படி வெளியானது என்பது குறித்து விசாரிக்கும்படி தகவல் தொழில்நுட்ப பதிவாளருக்கு
உத்தரவிடவேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தை சாதாரண மனிதர்கள் பார்த்தால் நீதிமன்றத்தின் மீது அவர்களுக்கு என்ன மாதிரியான எண்ணம் தோன்றும் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மூத்த நீதிபதியின் இந்த நடத்தை சார்ட்டர்டு நீதிமன்றமான சென்னை உயர் நீதிமன்ற மாண்பை சிதைக்கும் வகையில் உள்ளது என்றும், நீதிமன்றத்தில் ஆஜராகும்போது, வழக்கறிஞர்கள் தங்கள் சுயமரியாதையையும் கண்ணியத்தையும் ஏன் தியாகம் செய்ய வேண்டும் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நீதி பரிபாலனத்தில் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும், “ஒரு தேரின் இரு சக்கரங்கள்” என்று பல புகழ்பெற்ற சட்ட வல்லுநர்கள் பலமுறை கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் தங்களுக்கு கீழானவர்கள் என்ற தவறான எண்ணத்தை நீதிபதிகள் கொண்டுள்ளதாகவும், இது அதிகார துஷ்பிரயோகம் செய்யவும் மற்றும் வக்கீல்களை இழிவுபடுத்தவும் வழிவகுக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதில்லை, நீதிபதிகளால் அவமானப்படுத்தப்படுகிறார்கள். நீதி நிர்வாகத்தில் வழக்கறிஞர்களும் இணையானவர்கள், யாரும் உயர்ர்ந்தவர்களோ, தாழ்ந்தவர்களோ அல்ல என்பதை மறந்துவிடக் கூடாது என உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பயன்படுத்திய சில வார்த்தைகளுக்கு எதிராக தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிமன்ற அறைகளில் நீதிபதிகளின் நடத்தைக்கான விதிமுறைகளை உருவாக்குவது குறித்தும் பரிசீலித்து வருவதையும் வரவேற்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொஞ்சம் இதையும் படிங்க :  https://thenewscollect.com/delta-agriculture-and-food-fair-in-thanjavur-50-types-of-unheard-of-indigenous-banana-fruits/

உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் கூடுதல் நீதிமன்றங்களின் அனைத்து நீதிபதிகளும், வழக்கறிஞர்களை உரிய மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்துவதை உறுதிசெய்ய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் எனவும், நீதிபதிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்தாலோ, தவறாக நடந்து கொண்டாலோ, அதுகுறித்து வழக்கறிஞர்கள் புகார் அளிக்க குறை தீர்ப்பு நடைமுறை கொண்டு வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நீதிபதிக்கும் வழக்கறிஞருக்கும் இடையிலான தொடர்பு தொழில்முறையிலானது. அது நாகரீகமாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This Article
Leave a review