சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை மணலி ஜே.ஜே. நகரைச் சேர்ந்த அஸ்வின்குமார் ( 20) போதை பொருள் வழக்கு தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை நேற்று முன்தினம் சென்னையில் உள்ள கோர்ட்டுக்கு பலத்த பாதுகாப்புடன் சிறை போலீசார் அழைத்துச் சென்றனர்.

பின்னர் மாலை மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து வந்தபோது நுழைவுவாயிலில் இருந்த போலீசார் சந்தேகத்தின்பேரில் கைதி அஸ்வின்குமாரின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் அவர் அணிந்திருந்த செருப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் விசாரணை சிறையில் போலீசார் நேற்று வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிறைக்குள் செல்போன் பயன்படுத்தி கொண்டிருந்த ஆகாஷ், லாரன்ஸ், யுவராஜ், சஞ்சய், சேது ஆகிய மேலும் 5 கைதிகள் கையும் களவுமாக சிக்கினர். அவர்களிடம் இருந்து 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து பல சிறைகளில் சிறைத்துறையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.