தமிழகம் மட்டுமல்லாமல் தென் மாநிலங்களில் பா.ஜ.க காலூன்றுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தவர் ஜெயலலிதா என்பதை மறந்துவிட்டு அண்ணாமலை அறியாமையில் பேசி வருகிறார் என டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்தார்.
தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அண்ணாமலை அரசியலுக்கு புதியவர் என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார். தமிழக அரசியல் வரலாறு,ஜெயலலிதா என்னும் ஆளுமை பற்றி எல்லாம் கொஞ்சம் கூட தெரியாமல், வாய்க்கு வந்ததை அண்ணாமலை பேசி வருகிறார்.கடந்த 1996ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில்,ஜெயலலிதா மீது 49 வழக்குகள் போட்டனர். அதையெல்லாம் அவர் தவிடு பொடியாக்கினார். இந்திய அளவில் நடந்த சதியினால் தான் சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழகம் மட்டுமல்ல தென் மாநிலங்களில் பா.ஜ.க காலூன்றுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் ஜெயலலிதா என்பதை மறந்து விட்டு அண்ணாமலை பேசி வருகிறார். வாஜ்பாய், அத்வானி, பிரதமர் மோடி உள்ளிட்டோர் ஜெயலலிதாவிடம் அன்பாக பழகினார்கள். மதர் தெரசா போன்றவர்கள் கூட ஜெயலலிதாவின் திட்டங்களை பாராட்டி உள்ளனர்.

குறிப்பாக தொட்டில் குழந்தை திட்டத்திற்காக,மதர் தெரசா வீட்டிற்கு வந்து நேரடியாக ஜெயலலிதாவை பாராட்டி விட்டு சென்றார்.அதேபோல ஜெயலலிதா பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், ஏழை எளிய மக்கள் வளர்ச்சிக்காகவும், மாணவர்கள், இளைஞர்கள் வாழ் வாதாரத்திற்காகவும் விவசாயிகளுக்காகவும்,69 சதவீதம் இட ஒதுக்கீட்டை பின்தங்கிய மக்களுக்காக பெற்றுத் தந்தவர். அவரது 30 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையின் சாதனையை கண்டு தான், காழ் புணர்ச்சியால் வழக்கு போட்டனர்.இருப்பினும் ஜெயலலிதா மரணம் அடையும்வரை அவரை யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.
30 ஆண்டு காலம் தமிழகத்தில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் ஜெயலலிதா. அவரைப் பற்றி அண்ணாமலை அறியாமையில் பேசி வருகிறார் என கண்டித்தார்.
ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசியதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை கூட வெளியிடாதது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். ஜெயலலிதா என்றால் கூட யார் எனக் கூட கேட்பார். நான் உருவாக்கியவர் அவர், ஜெயலலிதாவை விட நான் சீனியர் எனக் கூட எடப்பாடி பழனிச்சாமி கூறுவார் என்றார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. ஏற்கனவே அவர் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. விசாரணையின் அடுத்த கட்டமாக அவர் வீட்டிற்கு ரெய்டு வந்துள்ளனர்.
மருத்துவ பொது கலந்தாய்வு. அறிவிப்பினை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். அந்தந்த மாநிலங்களில் உள்ள மாணவர்கள்,அதே மாநிலத்தில் படிப்பது தான் வசதியாக இருக்கும். எனவே, பழைய நடைமுறையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும். இதனை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அமைச்சர் துரைமுருகன் பொதுப்பணி துறையில் நீண்ட நாள் அனுபவம் உள்ளவர்.தமிழகத்துக்கு வரவேண்டிய தண்ணீரை கர்நாடகாவில் இருந்து பெறுவதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.