கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு இளம் வயதில் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை புரிந்திருப்பது வரலாற்று சிறப்புக்குரியது என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை சேர்த்திருக்கிறது.
செஸ் போட்டியில் உலக சாம்பியனுடன் விளையாடப்போகும் வீரரைத் தேர்வு செய்யும் கேண்டிடேட்ஸ் செஸ் கனடாவின் டொரன்டோ நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எட்டு முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்திய நாட்டின் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு இளம் வயதில் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை புரிந்திருப்பது வரலாற்று சிறப்புக்குரியது.

17 வயதாகும் சென்னையைச் சேர்ந்த குகேஷ் உலக சாம்பியனுடன் போட்டியிட உள்ளார் என்பது தமிழகத்திற்கு பெருமையாக இருக்கிறது, இந்திய நாட்டிற்கு புகழ் சேர்க்கிறது. உலக அளவில் இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் குகேஷ் அவர்களை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.
தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் குகேஷ் நடைபெற இருக்கும் உலக சாம்பியனுக்கான செஸ் போட்டியில் கலந்து கொண்டு, திறம்பட விளையாண்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.