கால்நடைத்துறையில் பணி மூப்பு அடிப்படையில் கண்காணிப்பாளர் நியமன உத்தரவு வழங்க அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவு .
கால்நடைத்துறையில் இறுதி பணி மூப்பு அடிப்படையில் நியமன உத்தரவு வழங்கவும், பதவி உயர்வில் வந்தவர்களுக்கான பணி மூப்பு இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவு .
பரமக்குடியைச் சேர்ந்த மயில்வாகனன், நெல்லை ஆரோக்கியராஜா சேவியர் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: டிஎன்பிஎஸ்சி நடத்திய கால்நடைத்துறை உதவியாளர் பணித்தேர்வில் வெற்றிப்பெற்று 2015-ல் உதவியாளராக நேரடியாக நியமிக்கப்பட்டோம்.

கால்நடைத்துறையில் 50 சதவீத பணியிடங்களை நேரடித் தேர்வு மூலமாகவும், 50 சதவீத பணியிடங்களை பதவி உயர்வின் மூலமாகவும் நிரப்ப 2015ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கால்நடைத்துறையில் 185 உதவியாளர் பணியிடங்களை நேரடியாகவும், 129 பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்பட்டது.
உதவியாளர் பணியிடத்துக்கு அடுத்த கண்காணிப்பாளர் பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பில் பல்வேறு குளறுபடி ஏற்பட்டது. நேரடியாக உதவியாளராக நியமிக்கப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு பட்டியலில் உரிய இடம் வழங்கப்படவில்லை. இதனால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில் அனைவரிடமும் கருத்துகள் கேட்டு முறைப்படி பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கவும், மாற்றியமைக்கப்பட்ட பதவி உயர்வு பட்டியல் வெளியிடவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் கால்நடைத்துறை கண்காணிப்பாளர்கள் பதவி உயர்வு பட்டியல் 18.7.2024-ல் வெளியிடப்பட்டது. இதில் முறைகேடு நடைபெற்றுள்ளது . நேரடியாக உதவியாளர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு பட்டியலில் உரிய இடம் அளிக்கப்படவில்லை.

எனவே பதவி உயர்வு பட்டியலை ரத்து செய்து, பதவி உயர்வால் உதவியாளர்களாக வந்தவர்களுக்கு முன்பு எங்கள் பெயர்களை சேர்க்கவும், பணியில் இளையவர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய நாளிலிருந்து எங்களுக்கு கண்காணிப்பாளர் பதவி உயர்வு மற்றும் பணப்பலன்கள் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஆர்.விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், இறுதி பணிமூப்பு பட்டியல் அடிப்படையில் நியமன உத்தரவு வழங்க அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் கொஞ்சம் படிங்க : https://thenewscollect.com/case-registered-by-enforcement-department-against-jaffer-sait-madras-high-court-again-withdraws-cancellation-order/
இதையடுத்து நீதிபதி, மனுதாரர் உட்பட தகுதியான நபர்களுக்கு நியமன உத்தரவு வழங்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு ஆகஸ்ட் 29 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவித்தார் .