சந்திரயான் வெறிறியைத் தொடர்ந்து, இஸ்ரோ, முதல் சூரிய ஆராய்ச்சிக்கான முதல் விண்கலமான ஆதித்யா-எல் 1-ஐ விண்ணில் செலுத்த இந்தியா தயாராக உள்ளது என்றும் இது செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் மத்திய விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
மெயின்புரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜிதேந்திர சிங், இந்தியாவின் சந்திரயான் திட்டத்தை உலகமே கொண்டாடி வரும் நிலையில், சூரியன் தொடர்பான ஆய்வுத் திட்டம் மீதான மக்களின் ஆர்வமும் பன்மடங்கு அதிகரித்துள்ளது என்றார்.
இந்தியாவின் விண்வெளித் துறையை கடந்த காலத் தடைகளில் இருந்து விடுவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ளதாக அவர் கூறினார். இதன் விளைவாக, இன்று, நான்கு ஆண்டுகளுக்குள், இஸ்ரோவின் நிதி ஆதாரங்கள் அதிகரித்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். விண்வெளித்துறை புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை நான்கிலிருந்து 150 ஆக உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.
ஐரோப்பிய செயற்கைக்கோள்களை செலுத்தியதில் இந்தியா 260 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாக ஈட்டியுள்ளது என்றும் அமெரிக்க செயற்கைக்கோள் செலுத்தப்பட்டதன் மூலம் இந்தியா 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைகளால்தான், சூரியனுக்கு முதல் விண்வெளி பயணத்தைத் தொடங்குவதற்கான நம்பிக்கையும் உறுதியும் இந்திய விண்வெளித்துறைக்கு உள்ளது என்று ஜிதேந்திர சிங் கூறினார்.