பதவிகாலம் முடிந்த பின்பு எந்த தகுதியின் அடிப்படையில் ஆளுநராக ஆர்.என்.ரவி நீடிக்கிறார் என மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி,
தமிழக ஆளுநர் அலுவலகத்திற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் சில கேள்விகளை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், கடந்த18.09.2021 அன்று தமிழக ஆளுநராக மாற்றப்பட்டு, ஐந்தாண்டு கால அவகாசம் 31.07.2024 அன்று முடிவடைந்ததுள்ளது என்றும், இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக் காலத்தை நீட்டிக்கும் உத்தரவையோ அல்லது அடுத்த ஆளுநர் நியமிக்கப்படும் வரை பதவியில் நீடிப்பதற்கான எந்த உத்தரவையும் நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே அடுத்த ஆளுநர் நியமிக்கப்படும் வரை பதவியில் தொடர இந்தியக் குடியரசுத் தலைவர் ஏதேனும் உத்தரவு பிறப்பித்துள்ளாரா? இல்லாவிட்டால், பதவிக்காலம் முடிவடையும் காலத்திற்கு பிறகு நீங்கள் எந்தத் தகுதியின் கீழ் ஆளுநர் பதவியில் தொடர்கிறீர்கள்?
நீங்கள் ஆளுநராக இருந்து விலகிய பிறகும் நீங்கள் ஆளுநர் பதவியில் நீடிப்பது சட்டவிரோதம் இல்லையா? அப்படியானால் நீங்கள் எப்போது ராஜ்பவன் வளாகத்தை காலி செய்வீர்கள் என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநரின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
எனவே, அடுத்த ஆளுநர் நியமிக்கப்படும் வரை பதவியில் தொடர குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பிக்காத நிலையில், பதவிக்காலம் முடிவடைந்த காலத்திற்கு பிறகு நீங்கள் எந்த தகுதியின் கீழ் ஆளுநர் பதவியில் தொடர்கிறீர்கள்? பதவிக்காலம் முடிந்த பிறகும் நீங்கள் ஆளுநர் பதவியில் நீடிப்பது சட்டவிரோதம் இல்லையா? என்று தமது கடிதத்தில் எஸ்.துரைசாமி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
முன்னதாக, மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “ஆர்.என்.ரவியை இரண்டாவது முறையாக தமிழக ஆளுநராக நியமிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்றும், அவரை மீண்டும் நியமித்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.