- வாகைகுளம் பகுதியில் நீரின்றி கருகிய பயிர்களை இசக்கி சுப்பையா எம்எல்ஏ நேரில் ஆய்வு.
நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள வாகைகுளம், மன்னார்கோவில் பகுதிகளில் வடக்குகோடை மேல் அழகியான் கால்வாய் கடைமடை பாசன பகுதிகளில் சுமார் 400 ஏக்கர் பயிரிடப்பட்டுள்ள நிலையில், மடையில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக சுமார் 150 ஏக்கர் நெற்பயிர்கள், நீரின்றி கருகி உள்ளன. இதையறிந்த அம்பை சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா இன்று அப்பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்து விவசாயிகளிடம் ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறும்போது, அணையில் 106 அடி தண்ணீர் இருந்தும் நெற்பயிர்கள் நீரின்றி கருகும் அபாயத்தில் உள்ளது. அரசின் மெத்தன போக்கை காட்டுகிறது. கடந்தாண்டு இதே பகுதியில் எனது சொந்த செலவில் பாசன கால்வாய்களை தூர்வாரி கொடுத்தேன். தற்போது முறையாக அரசு கால்வாயில் தண்ணீர் திறப்பதற்கு முன்பாகவே கடைமடை வரை தூர்வாரி தண்ணீர் திறந்து இருந்தால் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்பகுதியில் பாதிப்பு அடைந்த விவசாயிகளுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன் என்றார்.