காதலன் மற்றும் தோழியுடன் சேர்ந்து கணவனை ஆசிரியை ஒருவர் தீர்த்துக்கட்டினார். சேலத்தை அதிர வைத்த இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது ஆசிரியையின் தோழிதான் என்ற திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் வெளியாகி உள்ளது.
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அடுத்த மலையம்பாளையத்தை சேர்ந்த 32 வயதாகும் சுந்தரராஜ் (வயது 32) என்ஜினியர் ஆவார்.
இவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் சேலம் குகை பகுதியை சேர்ந்த நிவேதா (27) என்பவரை 8 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் செய்தார்.
சுந்தரராஜ் நிவேதா தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். நிவேதா தனியார் பள்ளி ஒன்றில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் சுந்தரராஜ் வீட்டில் தூக்குப்போட்டு இறந்ததாக சேலம் ஜலகண்டாபுரம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையத்து போலீசார் சுந்தரராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுந்தரராஜ் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். வழக்கம் போல் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த உடன் உடலை ஒப்படைத்துவிட்டு, அடுத்த பணிகளை மேற்கொள்ளலாம் என்று இருந்த போலீசாருக்கு பிரேத பரிசோதனை அறிக்கையில் வந்த தகவலை பார்த்து அதிர்ச்சி ஏற்பட்டது.
ஏனெனில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சுந்தர்ராஜின் கழுத்தில் காயங்கள் இருந்தன மேலும் அறிக்கையில் பல்வேறு முரண்பட்ட தகவல் இருந்தது.இதனால் சுந்தரராஜ்
கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சுந்தரராஜ் மனைவி நிவேதாவை கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீசார் விசாரணை வளையத்தில் கொண்டு வந்தனர்.
அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர். அப்போது தான் ஆசிரியை நிவேதா, அவருடைய கள்ளக்காதலன் தினேஷ் என்பவருடன் சேர்ந்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொலைக்கு மூளையாக நிவேதாவின் தோழி வித்யா இருந்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமானது. உடனே போலீசார் சுந்தரராஜ் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றினார்கள். இந்த கொலை தொடர்பாக நிவேதா, அவருடைய கள்ளக்காதலன் தினேஷ், தோழி வித்யா ஆகிய 3 பேரையும் கைது செய்தார்கள். கைதான 3 பேரிடமும் விசாரணை நடத்திய பின்னர் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். அப்போது அவர்கள் கூறிய தகவலை போலீசார் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
போலீசார் கூறும் போது, சுந்தரராஜூக்கும், நிவேதாவுக்கும் கல்யாணம் ஆன பின்னர் குடும்பத்துடன் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் குடியேறி இருக்கிறார்கள். 8 ஆண்டுகளாக அங்கு தான் இருந்துள்ளனர். இந்தநிலையில் சுந்தரராஜூக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சேலம் ஜலகண்டாபுரம் மலையம்பாளையத்துக்கு கடந்த 5 மாதத்துக்கு முன்புதான் வந்துள்ளனர். வேலையைவிட்டு வந்த சுந்தரராஜ் தறி ஓட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தனது வயிற்றுவலிக்கு ஈரோட்டில் உள்ள ஒரு மருத்துவனையில் சென்று அடிக்கடி சிகிச்சை பெற்று வந்தார். இதனால் வருமானம் குறைந்ததால் நிவேதா, நானும் வேலைக்கு செல்கிறேன் என்று கூறி விட்டு அங்குள்ள தனியார் பள்ளியில் தற்காலிகமாக ஆசிரியர் பணியில் சேர்ந்திருக்கிறார்.
அப்போதுதான் தோழி வித்யா மூலம் தினேசுடன், நிவேதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கு இடையே கள்ளக்காதலாக மாறி உள்ளது. இந்நிலையில் தினேஷ், நிவேதா கள்ளக்காதல் சுந்தரராஜூக்கு தெரியவந்தது.
அதன்பிறகு பள்ளிக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என மனைவிக்கு தடை விதித்து கடுமையா கண்டித்துள்ளார். இந்த பிரச்சினை குறித்து நிவேதா, தோழி வித்யாவிடம் கூறி இருக்கிறார். வித்யா, உன்னுடைய கணவரை கொன்று விடு. அப்போதுதான் நிம்மதியாக வாழலாம் என்று கூறினாராம். இதையடுத்து சுந்தரராஜை தீர்த்துக்கட்ட நிவேதா முடிவு செய்தாராம். மகனை வீட்டின் ஒரு பகுதியில் தூங்க வைத்து விட்டு இன்னொரு பகுதியில் கணவரின் கொலை திட்டத்தை நிவேதா அரங்கேற்றி இருக்கிறாராம்.
அதன்படி உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து சுந்தரராஜை தூங்க வைத்துள்ளார். இதையடுத்து தினேசை வரவழைத்து சுந்தரராஜ் முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடி உள்ளனர். பின்னர் தலையணையால் அமுக்கி சினிமாவை மிஞ்சும் வகையில் கொலை செய்திருக்கிறார்களாம். கொலையை மறைக்க அவரது கழுத்தில் சேலையின் ஒரு முனையை கட்டி உள்ளனர்.
அதன் அருகிலேயே சேலையை கத்தரிக்கோலால் துண்டித்துள்ளனர். பின்னர் சேலையின் மீதி பாகத்தை மின்விசிறியில் கட்டி தொங்க விட்டுள்ளனர். அதன்பிறகு தினேஷ் வீட்டுக்கு சென்று இருக்கிறார்கள். மறுநாள் காலையில் கணவன் தற்கொலை செய்ததாக கதறி அழுது நாடகம் ஆடி உள்ளார். கழுத்தில் இருந்த காயத்தை பூவை போட்டு மறைத்துள்ளார் நிவேதா.
ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் தூக்க மாத்திரை முதல் கழுத்தில் காயம் வரை அனைத்தும் அம்பலமாகி மாட்டிக்கொண்டுள்ளார்கள். இதனிடையே சேலம் குகை பகுதியை சேர்ந்த நிவேதாவின் பள்ளி தோழியான வித்யா தான் இந்தகொலைக்கு மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் தான் நிவேதாவிற்கு சுந்தரராஜை எப்படி கொலை செய்ய வேண்டும்.
அதனை மறைக்க என்ன செய்ய வேண்டும். உறவினர்கள், போலீசாரிடம் எப்படி நாடகமாட வேண்டும் என்ற விவரங்களை எல்லாம் சொல்லி கொடுத்தாராம். வித்யா ஜலகண்டாபுரத்தை சேர்ந்த செந்தில்குமாருடன் திருமணம் நடந்துள்ளது. பள்ளி தோழிகள் என்பதுடன் ஒரே பகுதிக்கு திருமணமாகி வந்ததால் அடிக்கடி சந்தித்தும் பேசி வந்துள்ளனர். வித்யா பட்டுப்புடவைகள் தயாரிக்கும் ஒரு நெசவு நிறுவனத்தில் வேலை செய்திருக்கிறார் அங்கு தினேசும் வேலை பார்த்து வந்துள்ளார். வித்யா மூலமாகத்தான் தினேஷ், நிவேதாவுக்கு அறிமுகம் ஆகி இருக்கிறார்.
அந்த வகையில் சுந்தர்ராஜை தீர்த்துக்கட்ட மூளையாக செயல்பட்டு திட்டம் போட்ட வித்யாவுடன் சேர்ந்து நிவோதா மற்றும் தினேஷ் ஆகியோர் கம்பி எண்ணுகின்றனர்.