சென்னை: செந்தில் பாலாஜி விவகாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், திமுக கூடாரமோ பெருத்த பரபரப்புக்கு ஆளாகி உள்ளது. இது தொடர்பாக சில பிரத்யேக தகவல்களும் நமக்கு கிடைத்துள்ளன. செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை சரியென்றும், அவரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதியளித்தும் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது.
அத்துடன், செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறைக்கு அனுமதியளித்துள்ளது கோர்ட்.
விசாரணைகள்:
செந்தில் பாலாஜியை வரும் 12-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்ட நிலையில், இன்று 2-வது நாளாக செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். செந்தில்பாலாஜி மீதான குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கில் தமிழக டிஜிபி மற்றும் உள்துறை செயலர் நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
அவகாசங்கள்:
எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்பதை டிஜிபி மற்றும் உள்துறை செயலரே, இந்த விஷயத்தில் நேரில் வந்து கேட்கட்டும் என்றும், 6 மாதம் அவகாசம் வழங்க முடியாது, குறைந்தபட்ச கால அவகாசம் மட்டுமே வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். செந்தில் பாலாஜி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இறுதி விசாரணையை நிறைவு செய்ய கால அவகாசம் கோரிய மனு மீது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சட்டரீதியான விவகாரங்கள் இப்படி பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், திமுக கூடாரமோ படுடென்ஷனாக காணப்படுகிறது. செந்தில்பாலாஜிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்ததுமே, திமுகவில் ஒருவித பரபரப்பு நிலவ துவங்கிவிட்டது. தீர்ப்பினை கேள்விப்பட்டு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் பெருத்த ஏமாற்றம் அடைந்தார்களாம்.
முன்கூட்டியே க்ளாஸ்:
அதேசமயம், அமலாக்கத்துறைக்கு சாதகமாக தீர்ப்பு வரும் பட்சத்தில், கஸ்டடிக்கு செந்தில் பாலாஜி செல்லக்கூடும் என்பதையும் முன்கூட்டியே யோசித்தே வைத்திருந்தனர். அதனால் தான், இந்த மோசடி வழக்கு தொடர்பாகவும், ரெய்டில் சிக்கியவைகளை வைத்தும் எந்தெந்த மாதிரியெல்லாம் அமலாக்கத்துறையினர் கேள்வி கேட்பார்கள் என்பதையும், அதற்கு எப்படிப்பட்ட பதில்களை சொல்ல வேண்டும் என்பதையும் செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே திமுக வழக்கறிஞர்கள் க்ளாஸ் எடுத்துவிட்டனராம். எனவே, அமலாக்கத்துறையினரின் கேள்விகளை, அநாயசமாக செந்தில்பாலாஜி எதிர்கொள்வார் என்ற தகவல் திமுக வட்டாரங்களில் பரவி வருகிறது. இது ஒருபுறமிருக்க, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, கஸ்டடி என நடந்திருப்பதால் இலாகா இல்லாத அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கப்படுவாரா? என்ற கேள்வியும் தமிழக அரசியலில் எதிரொலிக்கிறது.
கூடுதல் விபரம்:
ஆளுநர் இந்த விவகாரத்தை அன்று கிளப்பியபோதே, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிடலாமா? என்று திமுக மேலிடம் யோசித்ததாம். இதுகுறித்து தன்னுடைய குடும்பத்தினரிடமும் முதல்வர் ஸ்டாலின் அப்போது விவாதித்திருக்கிறார். குறிப்பாக, செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு என்று சுப்ரீம்கோர்ட்டும் உத்தரவு பிறப்பித்து விட்டால், அப்போது செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருப்பது பெரிதும் விமர்சிக்கப்படும் என்றும், அது தன்னுடைய நேர்மையான அரசு நிர்வாகத்தையும் அரசியலையும் கேள்விக்குறியாக்கினால், தன்னுடைய இமேஜ் சரியும் தானே என்றெல்லாம் விவாதித்தாராம் ஸ்டாலின்.
முக்கிய முடிவு:
ஆனால், செந்தில்பாலாஜியை பொறுத்தவரை, முதல்வரின் சங்கடத்தை நன்கு உணர்ந்துள்ளார். அன்று புழலில் கொண்டுசெல்லப்பட்ட தினத்தன்றே இதுகுறித்து பேசியிருந்தாராம் செந்தில் பாலாஜி. “என்னை மையப்படுத்தி தலைவருக்கு (ஸ்டாலின்) ஏற்படும் சங்கடங்கள் எனக்கு வருத்தமாக இருக்கிறது. என்னை பற்றி கவலைப்பட வேண்டாம். ஏற்கனவே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்திருக்கிறேன். அதை தலைவர் ஏற்க வேண்டும். தேவைப்பட்டால் கடிதம் கூட எழுதுகிறேன்” என்று
சிறைத்துறை அதிகாரிகள் மூலம் ஸ்டாலினுக்கு தெரியப் படுத்தியிருந்தாராம் செந்தில் பாலாஜி.
தர்மசங்கடம்:
அந்தவகையில், ஸ்டாலினுக்கு தர்மசங்கடத்தை தருவதற்கு முன்னேயே, செந்தில்பாலாஜி பதவியிலிருந்து தன்னை தானே விடுவித்து கொள்ளக்கூடும் என்கிறார்கள். உச்சக்கட்ட விசாரணைகளை அதிகாரிகள் நடத்தி வருவதால், இதுகுறித்த ஒரு முடிவு விரைவில் தெரிந்துவிடும். பொறுத்திருந்து பார்ப்போம்.!