திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடும்பரம் இருளர் காலனியில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இருளர் இன மக்களுக்கு 21 தொகுப்பு வீடுகள் அரசு சார்பில் கட்டித்தரப்பட்டது. இதை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் தற்போது தொகுப்பு வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
அதாவது வீடுகளின் மேற்கூரை பெயர்ந்தும், சுவர்களில் விரிசல் அடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.மேலும் மழை பெய்தால் மழைநீர் மேற்கூரையில் ஓழுகுவதால் வீட்டில் வசிக்க முடியாமல் முகாம்களில் தங்கி அவதிப்படுகின்றனர்.

பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைத்து தரவேண்டும் என பாதிக்கப்பட்ட இருளர் குடும்பத்தினர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
தற்போதும் இருளர்கள் பழுதடைந்த தொகுப்பு வீடுகளில் வசித்து வருகின்றனர். எனவே திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் எங்கள் வீடுகளை நேரில் பார்வையிட்டு, அனைவருக்கும் புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.