பசுமை ஹைட்ரஜன் குறித்த சர்வதேச மாநாட்டுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாடு புதுதில்லி விஞ்ஞான் பவனில் ஜூலை 5 முதல் 7 -ம் தேதி வரை நடைபெறுகிறது. பசுமை ஹைட்ரஜன் மதிப்புச் சங்கிலியில் உருவெடுத்து வரும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும். உலக அறிவியல் மற்றும் தொழிலியல் சமூகத்தினரை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழிலியல் ஆராய்ச்சிக் கவுன்சில், மத்திய அரசுக்கான முதன்மை அறிவியல் அலுவலகம் ஆகியவை இணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
பசுமை ஹைட்ரஜன் சூழலை எவ்வாறு உருவாக்குவது கார்பன் தணிப்புக்கான உலக இலக்குகளை எப்படி எட்டுவது இதில் பசுமை ஹைட்ரஜனின் பங்கு ஆகியவற்றை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மாநாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சக செயலர் பூபிந்தர் சிங் பல்லா, மதிப்புச் சங்கிலி குறித்த பல்வேறு நடவடிக்கைகளில் தொழில்துறையில் பங்கு பற்றி எடுத்துரைத்தார். 2070-ம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய நிகரத்தை எட்டும் இந்தியாவின் இலக்கை அடைய தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.