நாகையில் இந்தியா இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து 2ம் முறையாக நாகையிலிருந்து காங்கேசன் துறைமுகம் 15 பயணிகளுடன் புறப்பட்டது: வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி மட்டுமே கப்பல் இயக்கப்படும்.
இந்தியா இலங்கை இடையான கப்பல் போக்குவரத்து சேவை கடந்த 14 ஆம் தேதி காலை நாகையிலிருந்து துவங்கப்பட்டது. பாரதப் பிரதமர் நரேந்திர மோதி இலங்கை கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா, இலங்கைபிரதமர் ரனில் விக்ரமசிங்கே, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றனர்.

நாகை துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து சேவையை,மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால், தமிழக சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். 150 பேர் பயணம் செய்யக்கூடிய கப்பலில் 14ம் தேதி முதல் நாளே 50 பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். மீண்டும் இலங்கை காங்கேஷன் துறைமுகத்திலிருந்து 30 பயணிகள் நாகை துறைமுகம் வந்தனர்.
இந்த நிலையில் நேற்று 7 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாலும் நிர்வாக காரணங்களாலும் நேற்று பயணிகள் கப்பல் ரத்து செய்யப்பட்டது. இன்று அதிகாலையே துறைமுகம் வந்த முன்பதிவு செய்த பயணிகளை உரிய பரிசோதனைக்கு பின்னர் கப்பலுக்கு சென்றனர். ஏழு மணியிலிருந்து எட்டு மணிக்குள் கப்பல் புறப்பட வேண்டும் 100-ல் இருந்து 150 பயணிகள் வரை செல்லும்போது பரிசோதனை மற்றும் கப்பலுக்கு செல்லும் நேரத்தை பொறுத்து கப்பல் 08:00 மணிக்குள் புறப்படும்.

இன்று பயணிகள் குறைவாக உள்ள காரணத்தால் காலை 07:00 மணிக்கு 15 பயணிகளுடன் பயணிகள் கப்பல் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு புறப்பட்டது. மீண்டும் மதியம் காங்கேசன் துறைமுகத்திலிருந்து 23 பயணிகளுடன் புறப்பட்டு மாலை 5 மணி அளவில் நாகை துறைமுகம் வந்தடைய உள்ளது. வாரத்தில் திங்கள் புதன் வெள்ளி மட்டுமே பயணிகள் கப்பல் இயக்கப்பட உள்ளது.