மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு திமுக காரில் கொடியை கழட்ட சொன்ன போலீசார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் ஆளுநர் கையெழுத்து போடாததற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மதுரையில் அவர் கலந்துகொள்ளும் பட்டமளிப்பு விழாவில் பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன.மதுரை காமராஜர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா நாளை நடைபெறவுள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேச உள்ளார்.
இந்த விழாவில் 102 வயதைக் கடந்த சுதந்திர போராட்ட வீரரும், 9 ஆண்டுகள் சிறையில் இருந்தவருமான தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக காமராஜர் பல்கலைக் கழக செனட் மற்றும் சிண்டிகேட் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. இதுதொடர்பாக ஏற்கனவே அமைச்சர் பொன்முடி இரண்டு முறை வலியுறுத்தி இருந்தார்.ஆனாலும், ஆளுநர் ஆர்.என்.ரவியோ கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திடவில்லை.
இதனால் ஆளுநர் மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை முன் வைத்த அமைச்சர் பொன்முடி, இணை வேந்தர் என்கிற முறையில் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே ஆளுநருக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் மத்தியில், கவுரவ டாக்டர் பட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காத செயல் இன்னும் கோபத்தை அதிகரித்துள்ளது.

பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் பொன்முடியின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த மார்க்சிஸ்ட், ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கறுப்புக் கொடி ஏந்தி ஆர்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஆளுநர் கலந்துகொள்ளும் விழாவில் பங்கேற்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விழா அரங்கில் செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை என்றும், அப்படி செல்போன் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ரவி பட்டமளிப்பு விழாவிற்காக வருகை புரிய உள்ள சூழ்நிலையில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. கருப்பு சட்டை அணிபவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவது கிடையாது இந்நிலையில் தற்போது திமுக கொடியுடன் வந்த ஒரு காரில் இருந்து திமுக கொடி அகற்றப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டது. ஆளுநர் அரங்கினுள் நுழையும் போது அனைவரும் எழுந்து நின்று வரவேற்க வேண்டும் எனவும், ஆளுநர் மேடையில் அமர்ந்த பின்னர்தான் அனைவரும் இருக்கையில் அமர வேண்டும் என்று பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில், “மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவின் போது தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி என்.சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்காக மதுரை காமராசர் பல்கலைக்கழக சட்டவிதிகளின்படி ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப் பேரவைக் குழுவில் முறைப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் ஆளுநர் அவர்கள் கையெழுத்திட மறுப்பது சுதந்திர போராட்ட தியாகிகளை அவமதிக்கும் செயலாகும்.

இந்திய சுதந்திரத்திற்காக, விவசாயிகளுக்காக, அடித்தட்டு ஏழை மக்களுக்காக, தீண்டாமை கொடுமைக்கு எதிராக என தன் வாழ்நாள் முழுவதையுமே போராட்டம் நடத்தியும் சிறைக்கு சென்றும் கழித்த தோழர் சங்கரய்யா அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவருக்கு கௌரவ பட்டம் வழங்கும் கோப்பில் உடனடியாக கையெழுத்திடுமாறு ஆளுநர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.