ஓங்கட்டும் சகோதரத்துவம் .! அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்..!

0
121
இந்து முஸ்லிம் சகோதரத்துவம்

கடலூர்: கடலூரில் நடந்த சம்பவம் ஒன்று, தமிழக மக்களை நெகிழ வைத்து வருகிறது. இது தொடர்பாக வீடியோ ஒன்றும் இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது. இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை வந்தாலே, கடலூர் மாவட்டத்திலுள்ள திருப்புவம் முதுவந்திடல் கிராமம் மற்றும் தஞ்சாவூர்காசவளநாடு புதூர் கிராமமாக இருந்தாலும் சரி, களைகட்டிவிடும். இங்குள்ள இந்துக்கள் மொகரம் பண்டிகையை இங்கு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

ரம்ஜான்:

ரம்ஜான், மொகரம், தீபாவளி என 2 மத பண்டிகைகளையும், இங்குள்ள முஸ்லிம்களும், இந்துக்களும் கொண்டாடுவது வழக்கம். அறுவடையாகட்டும், திருமணம், தொழில் எதுவானாலும் சரி, பள்ளிவாசலில் வந்து அனுமதி கேட்டபிறகுதான் அங்குள்ள இந்துக்கள் அவைகளை தொடங்குவார்கள். பொதுவாக இஸ்லாமியர்கள் வேண்டுதல் முறைகள் கடுமையாக இருக்கும் என்பதால், இந்துக்களும் தங்களை வருத்தி கொண்டு தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்துவார்கள்.

இதற்காக பள்ளிவாசலில் காப்பு கட்டி ஆண்களும், பெண்களும் ஒரு வாரம் விரதம் இருப்பார்கள். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் விறகு கட்டைகளை தானமாக வழங்குவார்கள். பள்ளி வாசல் முன்பாக, மிகப்பெரிய அளவில் குழி வெட்டி, அதிகாலையில் கண்மாயில் நீராடிய பிறகு, ஆண்கள் வரிசையாக 3 முறை தீக்குழி இறங்குவார்கள்.

திருநீறு:

பெண்கள் முக்காடிட்டு உட்கார்ந்து கொள்ள, ஆண்கள் தலை மீது தீ கங்குகளை வாரி இறைப்பர். இதன் மூலம் பெண்கள் தங்களை நோய் நொடி அண்டாது என்பது இவர்களின் நம்பிக்கை. தீக்குழி இறங்கியவர்களுக்கு இஸ்லாமியர்கள் திருநீறு பூசி ஆசி வழங்குவார்கள். இந்துக்கள் நேர்த்திக்கடன் செலுத்த, முஸ்லிம் மக்கள் விபூதி வழங்கி ஆசீர்வதிக்கும் காட்சி நெகிழ்ச்சியை தந்துவிடும். இப்படி, இந்து – முஸ்லிம் மக்களின் ஒற்றுமை காலகாலத்துக்கும் இறுக்கமாகவே பயணித்துகொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், கடலூரில் நடந்த சம்பவம் ஒன்று ஒட்டுமொத்த மக்களையும் வியப்பிலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தி வருகிறது.

கடலூர் முதுநகரில் பிரசித்தி பெற்ற ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்வார்கள். அதேபோல, வெளி மாவட்டங்களில் இருந்தும் விசேஷ நாட்களில் பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம். தற்போது, இந்த கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த 4-ந்தேதி செடல் உற்சவமும் நடைபெற்றது. இப்படிப்பட்ட சூழலில், கடந்த
6-ந்தேதி சாயங்காலம், இந்த கோவிலுக்கு 2 முஸ்லிம் பெண்கள் வந்தனர். அதில் ஒரு பெண், கையில் குழந்தையை தூக்கி கொண்டு வந்திருந்தார். கோயிலுக்குள் நுழைந்த இந்த 2 பெண்களும்,
அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர்.

அம்மன் வழிபாடு:

அம்மன் அருகே நின்றுகொண்டு நீண்ட நேரம் சாமி கும்பிட்டனர். பிறகு, அம்மனிடம் மண்டியிட்டு நமஸ்காரம் செய்து, மறுபடியும் வழிபாடு செய்தனர். அதில் ஒரு பெண் தன்னுடைய குழந்தையையும் வழிபாடு செய்ய வைத்தார். இந்த காட்சிகள்தான் இணையத்தில் வீடியோவாக வைரலாகி கொண்டிருக்கிறது. முஸ்லிம் பெண்கள் மாரியம்மன் கோவிலுக்குள் வந்ததையும், பய பக்தியுடன் கும்பிட்டதையும் பார்த்து மக்கள் நெகிழ்ந்து போயுள்ளார்கள்.

இதான் இந்தியா:

எவ்வளவுதான் இடர்பாடுகளையும், இன, மத ரீதியான பிளவுகளையும் ஒரு சில விஷமிகள் கட்டவிழ்த்து விட்டாலும்.
ஈரம் கசியும் மனசு இங்கு இருக்கும்வரை, சகோதரத்துவத்தையும், மத நல்லிணக்கத்தையும், நம்மிடமிருந்து யாராலும் ஒருபோதும் பிரித்து விட முடியாது என்பதைதான் இந்த இஸ்லாமிய – இந்துமத உணர்வுகள் நாட்டுக்கு பறைசாற்றி கொண்டிருக்கின்றன. தொடர்ந்து தழைத்தோங்கட்டும் மதசகிப்புத்தன்மையும், மனிதநேயமும். அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here