- சென்னை நெம்மேலி அருகே பேரூரில் தமிழ்நாடு அரசு 4 ஆயிரத்து 276 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைத்து வரும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் அனுமதிக்கு புறம்பானது என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை-மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூரில் 85.51 ஏக்கர் பரப்பளவில் 4 ஆயிரத்து 276 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவில் ஜப்பான் பன்னாட்டு முகமை நிதியுதவியுடன் நாள் ஒன்றுக்கு 40 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 21ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் இந்த திட்டப்பணி செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதியை பெறவில்லை எனக்கூறி சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த மீனவர் நலச்சங்க தலைவரான எம்.ஆர்.தியாகராஜன், சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், கடலோர ஒழுங்குமுறை விதிகளுக்கு புறம்பான இந்த கட்டுமானத்தை அகற்ற உத்தரவிட வேண்டும். பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த திட்டத்துக்கு வழங்கிய அனுமதியை, தமிழ்நாடு கடலோர மேலாண்மை ஆணையம் திரும்ப பெற உத்தரவிட வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் உரிய அபராதம் விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/kallakurichi-poisoning-case-bail-petitions-dismissed-for-the-second-time-chennai-high-court-orders/
வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை செயலாளர், தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத் தலைவர், தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணைய உறுப்பினர் செயலர், சென்னை பெருநகர குடிநீர் மற்றும கழிவு நீரகற்றல் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தது.