தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பின்னையூர் மேலத்தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (49)வயது தச்சர். இவரது மனைவி அமிர்தவள்ளி (44)வயது இவர்களுக்கு பார்கவி, ஸ்ரீமதி என இரண்டு மகள்களும், வெற்றிவேல் என்ற மகனும் உள்ளனர்.பார்கவி தனியார் கல்லுாரியிலும், ஸ்ரீமதி ப்ளஸ் 1, வெற்றிவேல் ஐந்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், பழனிவேலுக்கும், அமிர்தவள்ளிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு பிரச்சனைகள் அதிகமாக ஏற்பட்டு வந்துள்ளது. பழனிவேல் சரியாக வேலைக்கு போகாமல் குடித்துவிட்டு ஊதாரி தனமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அமிர்தவள்ளி ஆடு வளர்த்தும், விவசாய பணி மற்றும் நூறு நாள் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். மேலும் மகளை தனது தங்கை மகனுக்கு திருமணம் செய்து தர வேண்டும் என பழனிவேல் தொடர்ந்து அதிகமாகவே வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு அமிர்தவள்ளி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதை போல் நேற்று மாலை குடிபோதையில் வந்த பழனிவேலுக்கும் – அமிர்தவள்ளிக்கும், இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் அதிகமானதில் ஆத்திரமடைந்த பழனிவேல் வீட்டில் இருந்த மண் வெட்டியை எடுத்து அமிர்தவள்ளியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த அமிர்தவள்ளி வீட்டிலேயே இறந்து கிடந்துள்ளார். மனைவியை வெட்டிவிட்டு வீட்டை சாத்திவிட்டு பழனிவேல் சென்று விட, பள்ளி முடிந்து குழந்தைகள் வந்து வீட்டை திறந்து பார்த்த போது தாய் அமிர்தவள்ளி இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அமிர்தவள்ளியின் பிள்ளைகள் அழுது சத்தம் போட்டு அழுததை கண்ட அக்கம் பக்கத்தினர் ஒடி வந்து பார்த்து அதிர்ந்தனர்.பின்னர் போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.பின்னர் விரைந்து வந்த போலிசார் விசாரணை மேற்கொண்டனர்.அத்துடன் பழனிவேலுவையும் தேடி வந்தனர்.இந்நிலையில் ஒரத்தநாடு ஸ்டேஷனுக்கு சென்று பழனிவேல் தனது மனைவியை கொன்றுவிட்டதாக கூறி சரணடைந்துள்ளார்.

பின்னர், ஒரத்தநாடு போலீசார், அமிர்தவள்ளியின் உடலை கைப்பற்றி, ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.பழனிவேலுவிடம் விசாரணை மேற்கொண்டு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.