புதுச்சேரியில் மனைவியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு கணவனும் தன்னை தானே கழுத்தறுத்து கொண்டு மாடியில் இருந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி பேருந்துநிலையம் எதிரே உள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் ரோஜா (30). முதல் கணவர் செரீப் கடந்த 8 வருடத்திற்கு முன்பு உயிரிழந்த நிலையில், தனது மகன் மற்றும் மகளுடன் தாய் கெளரி வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே ரோஜா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது அதே நிறுவனத்தில் கார் ஓட்டுனராக பணிபுரிந்துவந்த கோவை சூலூரை சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கடந்த 2021 ஆம் ஆண்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு 7 மாதங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் விக்னேஷிடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக ரோஜா அவரை பிரிந்து தனது குழந்தைகளுடன் கடந்த 13 மாதங்களாக மீண்டும் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று விக்னேஷ் புதுச்சேரியில் உள்ள ரோஜாவை அவரது தாய் வீட்டில் சந்தித்து தன்னுடன் வாழ வரும்படி வற்புறுத்தியுள்ளார்.ரோஜா அவருடன் வாழ மறுத்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டத்தில், விக்னேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரோஜாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் கழுத்தை அறுத்துகொண்டு முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரோஜாவின் தாய் கெளரி அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.பின்னர் இது தொடர்பாக உருளையான்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தற்கொலைக்கு முயன்ற விக்னேஷை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்து, பின்னர் கொலை செய்யப்பட்ட ரோஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இரண்டாவது கணவர் மனைவியை கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.