நாகையில் கலெக்டர்களுடன் முதல்வர் கள ஆய்வு.!

0
25
முதல்வர் ஆய்வு

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சிக்கு வந்து அங்கிருந்து மயிலாடுதுறையில் நடந்த தருமபுரம் ஆதீன கல்லூரி விழாவில் பங்கேற்றார். 2-ம் நாளான நேற்று நாகை மாவட்டம் திருக்குவளையில் கருணாநிதி படித்த பள்ளியில் அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் நேற்று மாலை நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய 4 மாவட்ட காவல் துறை அதிகாரிகளுடன் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கொலை, கொள்ளை, திருட்டு, நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  

ஸ்டாலின்

இந்நிலையில் 3-ம் நாளான இன்று காலை நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வளர்ச்சி பணிகள், புதிய திட்டங்களுக்கான மதிப்பீடுகள், மத்திய மாநில அரசுகளின் நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியசாமி, ஏ.வ.வேலு, பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ்பொய்யாமொழி, மெய்யநாதன், ரகுபதி, மாவட்ட கலெக்டர்கள் ஜானிடாம் வர்க்கீஸ் (நாகை), தீபக்ஜேக்கப் (தஞ்சை), சாருஸ்ரீ (திருவாரூர்), மகாபாரதி (மயிலாடுதுறை) மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், துறை சார்ந்த அரசு முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 4 மாவட்ட கலெக்டர்களும் தங்களது மாவட்டங்களில் செய்து முடிக்கப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள், செய்ய வேண்டிய பணிகள், செயல்படுத்தப்பட்ட அரசின் நல்ல திட்டங்கள், நிலுவையில் உள்ள திட்டங்கள் என்பது குறித்து பேசினர்.  

தொடர்ந்து மாவட்டங்களில் ரூ. 2000 கோடிக்கு மேல் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகள் முதலமைச்சரிடம் இடம் எடுத்துரைத்தனர். மேலும் பொதுப்பணித்துறை கீழ் உள்ள பாசன வாய்கால்களில் தடையின்றி தண்ணீர் செல்ல எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் கூறினர். அதனை தொடர்ந்து கள ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :- கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கி மண்டல வாரியாக ஆய்வு நடத்தி வருகிறேன். இன்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கான கள ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுமக்களுக்கான பணி சிறக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு தான் கள ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. திராவிட மாடல் ஆட்சியில் எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்திட வேண்டும் என்பதே எங்களது லட்சியம். அதனை இலக்காக கொண்டு தான் செயல்படுகிறோம். உங்களை உற்சாகப்படுத்துவதற்கும், உங்கள் பிரச்சினைகளை நேரடியாக அறிவதற்கும் தான் இந்த ஆய்வு கூட்டம். ஆட்சிக்கு வந்து 2 ஆண்டு முடிந்து 3-ம் ஆண்டு நடந்து வருகிறது. இந்த காலத்தில் எத்தனையோ நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.  

முதல்வர்

அனைத்து திட்டங்களும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டே நிறைவேற்றப்பட்டு உள்ளது. இன்னும் பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டங்களை செயல்படுத்த எப்போதும் போல் உங்களது ஒத்துழைப்பும் தேவை. இந்த ஆய்வின்போது குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய் துறை வழங்க கூடிய பட்டா மாறுதல் உள்ளிட்ட சேவைகள், நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன் மேம்பாடு, பொது கட்டமைப்பு வசதிகள், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்பட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் அதனின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்கள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைவது குறித்தும் நாம் ஆலோசனை நடத்தி உள்ளோம்.  

4 மாவட்டங்களிலும் நிலுவையில் உள்ளள திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும். அரசு கொண்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி மக்களுக்கும் சென்ற சேர்வதை உறுதிபடுத்த வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பரீசிலித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் வெகு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதுதான் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வு கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here