பெண்கள் நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கிய டாக்டர் ஷர்மிகாவை அனைவருக்கும் தெரியும்.
இப்பொழுது அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன.
ஷர்மிகாவின் மருத்துவ குறிப்பு வீடியோக்களை பார்த்து தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக 2 பேர் இந்திய மருத்துவ ஆணையரகத்திடம் புகார் அளித்துள்ளனர்.
தமிழ்நாடு பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு தலைவர் டெய்சி சரணின் மகள் டாக்டர் ஷர்மிகா. போலி டாக்டர் டெய்சி சரண் யாரென்று நியாபகம் இருக்குறதா? கேசவ வினாயகம், டெய்சி மற்றும் திருச்சி சூரியா. அந்த முரட்டு சம்பவம் நியாபகம் இருக்குமென்று நினைக்கிறேன். சரி இவர் கதைக்கு வருவோம்.

ஆயுர்வேதா மருத்துவம் படித்துள்ள இவர் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சித்த மருத்துவ குறிப்புகளை கூறி பிரபலமானார். இவருக்கு ரசிகர்களும் அதிகமானார்கள். ஷர்மிகா சித்த மருத்துவராக தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் தனியார் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் பொழுது பல்வேறு சர்ச்சைக்குரிய மருத்துவ குறிப்புகளை வழங்கி சிக்கலில் சிக்கி இருந்தார்.
தினமும் நான்கு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும், பெண்கள் கவிழ்ந்து படுத்தால் மார்பக புற்றுநோய் உண்டாகும்.. உடல் எடையை குறைக்க என்னதான் டயட் இருந்தாலும்
ஒரே ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டால் மூன்று கிலோ எடை கூடிவிடும்..பெண்களின் மார்பகங்களை போலவே இருக்கும் நுங்குவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மார்பகங்கள் பெரிதாக மாறும்.
குழந்தை பாக்கியம் என்பது இயற்கை மனசு வைத்தால் மட்டுமே கிடைக்கும். அவரவர் செய்யும் நன்மைகள், தீமைகளை வைத்துதான் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று ஷர்மிகா பேசியது சித்த மருத்துவத்துக்கு சம்மந்தம் இல்லாதது என்று குற்றசாட்டுகள் எழுந்தன. ஷர்மிகாவின் பேச்சு சர்ச்சையாகவே சமூக வலைத்தளங்களில் பலரும் ட்ரோல் செய்தனர்.

அதோடு மருத்துவக்குறிப்பு என்ற பெயரில் தவறான கருத்துக்களை பகிர்ந்து வருவதாக அவரை ஹோமியோபதி மருத்துவத்துறை விசாரிக்க முடிவு செய்து, சித்த மருத்துவ கவுன்சில் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து ஷர்மிகா ஜனவரி 24ஆம் தேதி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி இயக்குநரகத்தில் ஆஜரானார்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஷர்மிகா மருத்துவம் குறித்து எந்த வீடியோவும் வெளியிடாமல் மீடியா வெளிச்சம் படாமலும் இருந்து வருகிறார்.
இந்த சூழலில், ஷர்மிகா மீது இந்திய மருத்துவ ஆணையரகத்தில் இரண்டு பேர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், ஷர்மிகாவின் வீடியோக்களில் கூறிய மருத்துவக் குறிப்புகளை பின்பற்றியதால் பாதிப்பு ஏற்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது ஷர்மிகாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. விடாது கருப்பாக விரட்டும் புகார்களால் அதனை சமாளிக்க என்ன செய்யலாம் என்று யோசித்து வருகிறார் டாக்டர் ஷர்மிகா.