தொடர் மழை காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 19-ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நேற்று மாலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து காற்றுடன் கூடிய மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது.

அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், ஆனந்தகிரி, அண்ணாநகர், உகார்த்தேநகர் உள்ளிட்ட நகர்ப்பகுதிகளிலும் பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, கீழான வயல் உள்ளிட்ட மலைக்கிராமப்பகுதிகளில் மிதமான மழையாகவும் வேறு ஒரு சில பகுதிகளில் கன மழையாகவும் பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்று நீலகிரி, தேனி, தென்காசி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை விலக உள்ள நிலையில் தான் தமிழகத்தில் அந்த மழை தீவிரமடைந்து மழை பெய்து வருகிறது. நேற்று மற்றும் நேற்று முன் தினமும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை பெய்தது.

இதேபோல் விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் நேற்று முன் தினம் மற்றும் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மாலை நேரங்களில் நல்ல மழை பெய்தது. இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மட்டும் ஒரேநாளில் 17 செண்டி மீட்டர் மழை பெய்தது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இதேபோல் நாளையும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.