300 ஆண்டுகளாக இந்துக்களும் முஸ்லீம்களும்., தஞ்சையில் சுவ …

The News Collect
2 Min Read
இந்துக்கள் கொண்டாடும் மொகரம் பண்டிகை

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக 300 ஆண்டுகளுக்கு மேலாக தஞ்சை மாவட்டம் காசநாடு புதூர் கிராமத்தில் இந்துக்கள் பஞ்சா எடுத்து மொகரம் பண்டிகையை கொண்டாடினார்கள். பத்து நாட்கள் விரதம் இருந்து தீ குண்டத்தில் இறங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி கொண்டனர்.

- Advertisement -
Ad imageAd image


தஞ்சை அருகே காசவளநாடு புதூர் கிராமத்தில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்களின் பண்டிகையான மொகரம் பண்டிகையின் போது இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. காசவளநாடு புதூர் கிராமத்தில்  நான்கைந்து தலைமுறையாக அல்லாவுக்கு விழா எடுக்கும் இந்துக்கள், இதற்காக பத்து நாளைக்கு முன்பாக ஊரின் பொது இடத்தில் அல்லா சாமி” என்றழைக்கப்படும், கை உருவம் கொண்ட பொருட்களை தனியாக எடுத்து பந்தல் அமைத்து, விரதம் இருந்து, தினமும் அதற்கு பூஜைகள் நடத்தி, பாத்தியா ஓதி, மொகரம் திருநாளில் இரவு முழுவதும் வீடு வீடாக வீதியுலா சென்று மறுநாள் காலையில் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம்.

அதன்படி கடந்த 10 தினங்களுக்கு முன் கை உருவத்தை வெளியே எடுத்து வைத்தனர். தினமும் காலை, மாலை இருவேளையும் பாத்தியா ஓதி வழிபாடு நடத்தினர். இதைத்தொடர்ந்து நேற்று இரவு அல்லா சாமிக்கு மாலை அணிவித்து வீதியுலாவாக ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் சென்றனர். அங்கு வீடுகளில் புது மண் கலயத்தில் பானகம், அவல், தேங்காய், பழம், மாலைகள் அணிவித்து  அல்லா சாமியை கிராம மக்கள் வரவேற்றனர்.

நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை கிராமம் முழுவதிலும் உள்ள வீடுகளுக்கு இந்த அல்லா சாமி சென்றது. பின்னர் மீண்டும் ஊர் பொது இடத்திற்கு வந்ததும், அல்லா சாமியை தூக்கி வந்தவர்கள் முதலில் தீயில் இறங்கினர். இதைத் தொடர்ந்து, சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என கிராம மக்கள் தீக்குண்டத்தில் இறங்கி வேண்டுதலை செலுத்தி வழிபட்டனர்.

இதுகுறித்து காசவளநாடு புதூரை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்:  இஸ்லாமியரின் பண்டிகையான மொகரம் பண்டிகையை இந்துக்கள் அதிகம் உள்ள எங்களது ஊரில்,
முன்னோர்கள் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து பாரம்பரியமாக 300 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் கொண்டாடி வருகிறோம். இவ்விழாவை இந்துக்கள் கொண்டாடும்போது இஸ்மியர்களும் உடன் இருந்து அவர்களும் வழிபடுகின்றனர். இதற்காக பத்து நாள் விரதமும் இருக்கிறோம்.

அல்லா என்று எங்களால் அழைக்கப்படும் கை உருவம் தாங்கியவற்றை நாங்கள் “கரகம்” எடுப்பது போல் அதற்கு பூக்களால் அலங்கரித்து, பட்டுத்துணிகளை போர்த்தி, இரவு முழுவதும் வீடு வீடாக சென்ற பின்னர்,  விடியற்காலையில் அல்லாவை வணங்கி, வேண்டுதலை நிறைவேற்ற தீமிதி இறங்குவோம் என்றார்.

Share This Article
Leave a review