- ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவன பயனாளிகள் சுமார் 3 கோடிக்கு மேற்பட்டோரின் முகவரி, மொபைல் எண், பான் நம்பர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் சீன இணையதளம் ஒன்றில் கடந்த மாதம் வெளியானது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், வாடிக்கையாளர்களின் புள்ளி விவரங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என 2022ம் ஆண்டே ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு அறிக்கை அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காததால் இந்த தகவல் திருட்டு நடந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பஞ்சாப்-பை சேர்ந்த இணையதள பாதுகாப்பு ஆராய்சியாளர் ஹிமான்ஷு பதக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத்தரப்பில், சம்பந்தப்பட்ட நபர்கள் தான் தகவல் திருட்டு குறித்து புகார் அளிக்க வேண்டும் எனவும், இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் தான் இதுசம்பந்தமாக விசாரிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் தரப்பில், சைபர் பாதுகாப்பு குறித்து அவ்வப்போதைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/the-high-court-ruled-that-the-complaint-that-the-woman-had-been-abducted-and-killed-was-false/
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் தரப்பில், மனுதாரர் நிறுவனம் அனுமதியின்றி தங்கள் இணையதளத்துக்குள் நுழைந்தது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.இந்த வாதங்களை பதிவு செய்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.