லஞ்சம் வாங்கிய வழக்கில், தாசில்தாரின் தற்காலிக டிரைவருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த நான்கு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி தாசில்தாராக இருந்த அன்பரசனின் தற்காலிக டிரைவர் வில்லிஸ். லஞ்ச வழக்கில், இவருக்கு நான்கு ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதித்து, 2019 பிப்.8ல் விழுப்புரம் ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வில்லிஸ் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, நீதிபதி விவேக் குமார் சிங் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி,” மனுதாரருக்கு எதிரான புதிய குற்றச்சாட்டில் அரசு தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கப்படவில்லை.
லஞ்ச பணம் என அறிந்தும், மனுதாரர் அதை பெற்றார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அனுமானத்தின்பேரில், மேல்முறையீடுதாரர் மீது குற்றச்சாட்டை சுமத்த முடியாது. சாட்சியங்களை சரிவர கவனத்தில் கொள்ளாமல் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, இதை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.
அரசு தரப்பில்,’சாட்சியங்கள், ஆவணங்களை பரிசீலித்து தான், சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாட்சிகளை மீண்டும் விசாரிக்க போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற அடிப்படையில், மனுதாரர் வழக்கை ரத்து செய்ய கோர முடியாது” என்றார்.
கொஞ்சம் இதையும் படிங்க: https://thenewscollect.com/product-defect-consumer-court-orders-hp-computer-company-to-pay-compensation-within-two-weeks/
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி,’ வழக்கில் லஞ்ச பரிவர்த்தனை குறித்து, மனுதாரர் அறிந்திருந்தார் என்பதை, அரசு தரப்பு போதிய சாட்சிகள் வாயிலாக நிரூபிக்க தவறிவிட்டது. குற்றச்சாட்டை மாற்றிய பின், சாட்சிகளை மறு விசாரணை செய்ய, மனுதாரருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை’ என தெரிவித்து, சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.