ஹீரோ ஆசியன் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி சென்னை 2023க்கான கோப்பையின் பிரம்மாண்ட வெளியீட்டு நிகழ்வு புதுதில்லியில் உள்ள மேஜர் தியான்சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கோப்பையை அறிமுப்படுத்தினார். ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கும் இப்போட்டியில், இந்தியா, கொரியா, மலேசியா, ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.
கோப்பை வெளியீட்டு விழா ஆசிய ஹாக்கியின் கண்கவர் கொண்டாட்டமாக மாறியது. இந்தக் கோலாகலமான நிகழ்ச்சியில், முனைவர் அதுல்ய மிஸ்ரா இ.ஆ.ப, ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் குமார் திர்கி, பொதுச்செயலாளர் போலா நாத் சிங், பொருளாளர், ஹாக்கி யூனிட் & தமிழ்நாட்டின் (புரவலர் மாநிலம்) தலைவர் சேகர் மனோகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். மேலும், ஹர்பிந்தர் சிங், அசோக் திவான், ஜாபர் இக்பால், ரோமியோ ஜேம்ஸ், எம்.பி. சிங், ஹெச்.பி.எஸ். சிமானி மற்றும் வினீத் குமார் போன்ற பிரபல சர்வதேச ஹாக்கி வீரர்களும், ஒலிம்பிக் வீரர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது ‘பாஸ் தி பால்’ பிரச்சாரம் தொடங்கப்பட்டது. அதில் அமைச்சர் அனுராக் தாக்கூர் வளைதடியால், ஹாக்கி பந்தை டிரிப்ளிங் செய்து இந்திய ஹாக்கி ஜாம்பவான் ஜாபர் இக்பாலுக்கு அனுப்பினார்.

மேலும், தில்லி, சண்டிகர், குவஹாத்தி, பாட்னா, புவனேஸ்வர், ராஞ்சி, பெங்களூர், திருவனந்தபுரம் மற்றும் நடத்தும் நகரமான சென்னை உள்ளிட்ட பல நகரங்களுக்குக் கோப்பை பயணிப்பதால், ‘பாஸ் தி பால்’ மற்றும் கோப்பையின் சுற்றுப்பயணம் முழுவதும் திட்டமிடப்பட்ட பல்வேறு விளம்பர நடவடிக்கைகளுக்கு இந்த நிகழ்வு முன்னோடியாக அமைந்தது. தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்குச் செல்வதற்கு முன், ‘பாஸ் தி பால்’ மற்றும் கோப்பையின் சுற்றுப்பயணம் ஒரு துள்ளலான சூழலை உருவாக்குவதையும், வளைகோல் பந்தாட்ட ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்குவதையும், இந்திய ஆண்கள் வளைகோல் பந்தாட்ட அணிக்கு ஆதரவு நல்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
புகழ்பெற்ற கோப்பை வடிவமைப்பாளரான சஞ்சய் ஷர்மாவால் தயாரிக்கப்பட்ட ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை, பித்தளை, அலுமினியம் மற்றும் தாமிரம் ஆகியவற்றின் இணக்கமான கலவையில் கைவினைப்பொருளாக வடிவமைக்கப்பட்டு, அதன் மீது நிக்கல் மற்றும் தங்கத்தால் நேர்த்தியாகப் பூசப்பட்டுள்ளது. கோப்பையை அலங்கரிக்கும் ஒவ்வொரு படிகமும், கோப்பையின் நேர்த்தியான வடிவமைப்பும், கோப்பையின் மதிப்பைத் தனித்துக் காட்டி உயர்த்துமளவும், போட்டிகளின் பிரம்மாண்டத்திற்கு ஈடு கொடுத்து மதிப்பை அதிகரிக்குமளவும் மிகக் கவனமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
விழாவில் பேசிய மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை மற்றும் தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், “ஹீரோ ஆசிய சாம்பியன்ஸ் டிராபி சென்னை 2023, சென்னையில் நடைபெறவுள்ளது. மதிப்புமிக்க இந்தப் போட்டியை, முதல் முறையாக இந்தியாவில் நடத்தும் ஹாக்கி இந்தியாவை நான் வாழ்த்துகிறேன். மூன்று முறை, ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றுள்ளது. இப்போது, இந்த ஆண்டு நான்காவது முறையாக வென்று நம்மால் சரித்திரம் படைக்க முடியும். இந்த அழகான கோப்பையை வெல்ல இந்திய ஆண்கள் ஹாக்கி அணி சிறப்பாக செயல்பட வேண்டும். கோப்பையின் சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்ததற்காக ஹாக்கி இந்தியாவை வாழ்த்துகிறேன். கோப்பையின் சுற்றுப்பயணம் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும். ஏனெனில் இது உற்சாகத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி, இளம் வீரர்களை கோப்பையையும் போட்டிகளையும் காணத் தூண்டுகிறது. மேலும் ஒரு நாள் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவையும் அது உருவாக்கும். போட்டியில் பங்கேற்கும் நாடுகளுக்கும், நாங்கள் சிறந்த விருந்தோம்பலை வழங்குவோம். சிறந்த அணி வெற்றி பெறட்டும்” என்றார்.
ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் குமார் திர்கி பேசுகையில், “ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 2023 -க்கான கோப்பையை வெளியிடுவதில் ஹாக்கி இந்தியா மகிழ்ச்சியடைகிறது. ஆசிய வளைகோல் பந்தாட்டத்தின் உலகத் தரம் மிக்க போட்டிகளை நடத்துவதற்கான எங்கள் பயணத்தில் இந்த நிகழ்வு ஒரு அற்புதமான மைல்கல்லாக அமைந்துள்ளது. நாடு தழுவிய ‘பாஸ் தி பால்’ பிரச்சாரம் மற்றும் கோப்பையின் சுற்றுப்பயணம், இந்நிகழ்வைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விளையாட்டின் மீது இளைஞர்களின் ஆர்வத்தைத் தூண்டவும் உதவும். இது நமது விளையாட்டு வீரர்களின் ஆர்வத்திற்கும் திறமைக்கும், இந்திய மக்களுக்கு விளையாட்டின் மீது பெருகி வரும் செல்வாக்கிற்கும் ஒரு சான்றாக அமையும்” என்றார்.
ஹாக்கி இந்தியா பொதுச்செயலாளர் போலா நாத் சிங் பேசுகையில், “மதிப்புமிக்க ஆசிய சாம்பியன்ஸ் டிராபியின் பிரம்மாண்டமான வெளியீட்டைக் காண்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தக் கோப்பை, ஆசிய வளைதடிப் பந்தாட்டத்தினுடைய சாதனையின் உச்சத்தைப் பிரதிபலிப்பதோடு, நமது வீரர்களின் கனவுகள், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றையும் குறிக்கிறது. பங்கேற்கும் அணிகளுக்கு இது ஒரு உத்வேகமாகவும், ஒவ்வொரு நாடும் கைப்பற்ற விரும்பும் மதிப்புமிக்க பரிசாகவும் இருக்கும்” என்றார்.
ஹீரோ ஆண்கள் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி சென்னை 2023 இன் போட்டிகள், ஸ்டார் ஸ்போர்ட்ஸிலும், டிஸ்னி + ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் ஒளிபரப்பப்படும். இந்தியாவிற்கு வெளியே உள்ள ரசிகர்களுக்காக watch.hockey இல் நேரலையில் ஒளிபரப்பப்படும்.