சென்னையில் தற்போது பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை இரவில் இருந்து கொட்டித்தீர்த்து வருகிறது. பகலில் அடித்த வெயிலுக்கு மழை குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தி உள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களை தவிர பல மாவட்டங்களில் வெயில் வெளுத்து வாங்கிய நிலையில். தென்மேற்கு பருவமழை அதிகம் பொழியும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான தென்காசி, கன்னியாகுமரிலும் மழை குறைந்துள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
அதன்படி மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் நேற்று கூறியிருந்தது.
இந்நிலையில் நள்ளிரவு நேரமான இப்போது சென்னையின் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னை முகப்பேர், அண்ணா நகர், கோயம்பேடு, அரும்பாக்கம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பகலில் பல இடங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இந்த மழை மக்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்தடுத்து சோளிங்கர், திருப்பபோர், வண்டலூர், அம்பத்தூர், பூவிருந்தவல்லி, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, செங்கல்பட்டு, வாலாஜாபாத் பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.