பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
நெல்லை, குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்காக விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் தொடர்கிறது.
அதிக அளவு வெளுத்து வாங்கும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்
இந்நிலையில், தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும், வட கிழக்கு பருவமழை இதுவரை இயல்பை விட 5 சதவீதம் அதிகம் பெய்துள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது பின்வருமாறு:

தற்போதைய கனமழைக்கு மேக வெடிப்பு காரணம் இல்லை. வளிமண்டல சுழற்சியே காரணம். ஆனால் வளிமண்டல சுழற்சியில் இதுவரை இந்த அளவிற்கு மழை பெய்தது இல்லை. அக்டோபர் 1 முதல் தற்போது வரை வடகிழக்கு பருவமழை இயல்பை விட 5 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது.நெல்லை, குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்காக விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் தொடர்கிறது.
நெல்லை, குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நாளையும் கனமழை நீடிக்கும். கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதி கனமழை பெய்துள்ளது. வரலாற்றில் இல்லாத அளவிற்கு பாளையங்கோட்டையில் அதி கனமழை பெய்துள்ளது.மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில் குமரிக்கடல், தென் மாவட்டம் மற்றும் மன்னார்வளைகுடா பகுதிகளில் அடுத்து வரும் 2 நாட்களுக்கு பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.என அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தொலைத்தொடர்பு கோபுரங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அடிப்படையில் துரிதமாக மின்சாரம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது வரை திருநெல்வேலி மாவட்டத்தில் 79 உயரழுத்த மின் கம்பங்கள், 61 தாழ்வழுத்த மின் கம்பங்கள், 2 மின் மாற்றிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 20 உயரழுத்த மின் கம்பங்கள், 9 தாழ்வழுத்த மின் கம்பங்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு உயரழுத்த மின் கம்பம், 4 தாழ்வழுத்த மின் கம்பங்கள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் 2 தாழ்வழுத்த மின் கம்பங்கள் ஆகியவை சேதமடைந்துள்ளன.
மேற்கண்ட மாவட்டங்களின் பாதிப்படைந்த பகுதிகளில் மின்சாரம் சீரமைக்கும் பணிகளில் 5,000 பேர் தற்போது களத்தில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள 2,78,557 மின்கம்பங்கள், 10,400 கி.மீ. மின்கம்பிகள் மற்றும் 19,466 மின்மாற்றிகள் உட்பட அனைத்து தளவாட பொருட்களும் கையிருப்பில் உள்ளன. மேலும் 3 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன” என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.