தென்காசி பகுதியில் 3 மணி நேரமாக பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, இதனால் பொதுமக்கள் தவிப்பு மற்றும் வாகன ஒட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் திணறல்.
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 05.11.2023 நேற்று மாலை திடீரென கன மழை பெய்யத் தொடங்கியது. இந்த கனமழையின் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொட்டத் தொடங்கியது.

மேலும் அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தென்காசி நகரப் பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளுக்கு துணிகள் எடுப்பதற்கு, வீடுகளுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு விடுமுறை தினம் என்பதால் திரண்டு வந்திருந்தனர், மாலை பொழுதில் ஏராளமான மக்கள் தென்காசி நகரப் பகுதியை மையம் கொண்டதால் சுமார் 7 மணி அளவில் தென்காசி நகராட்சி பகுதி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்யத் தொடங்கியது.
இந்த கனமழையின் காரணமாக பண்டிகைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் அனைவரும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர், மேலும் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக தென்காசி நகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் கழிவு நீரோடைகள் போதிய பராமரிப்பு இல்லாமல் இருப்பதின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட தொடங்கியது.

தென்காசி இலஞ்சி சாலையிலும், கே ஆர் காலனி, புதிய பேருந்து நிலையம், தென்காசி நகராட்சி பகுதி என தென்காசி நகராட்சியிலுள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் மிகவும் திணறிய வண்ணம் சென்றனர்.
மருத்துவமனைக்கு நோயாளிகளை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் வாகனமும் மழைநீரில் நீந்தியே சென்றது. மேலும் ஏராளமான இருசக்கர வாகனங்கள் மழையின் காரணமாக நனைந்ததால் இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் வாகனங்களை முட்டளவு தண்ணீரில் உருட்டி செல்லும் நிலையில் ஏற்பட்டது. மேலும் ஏராளமான சாலையோர வியாபாரிகளும் இந்த தொடர் மழையின் காரணமாக பெரும் பாதிப்பை சந்தித்தனர்.