சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த தேவண்ண கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் கமலஹாசன். இவருக்கு ராதிகா என்ற மனைவியும் இரு குழந்தைகளும், தாயும் உள்ளனர்.
ஆதிக்க சாதியினர், தீண்டாமை கொடுமைப்படுத்துவதாக கூறி சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கண்ணீர் மல்க மனு அளித்தனர்.சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் மனு அளித்துவிட்டு வந்த ராதிகா செய்தியாளர்களை சந்தித்து,
தாங்கள் குடும்பத்தோடு தேவண்ண கவுண்டனூரில் 50 ஆண்டுகாலமாக புறம்போக்கு நிலத்தில் வசித்து வருவதாகவும், அந்த இடத்திற்கு 47 ஆண்டு காலமாக ஊராட்சி நிர்வாகத்திற்கு வரி செலுத்தியதாக தெரிவித்தார்.
தாங்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் என்பதால்,வீட்டின் அருகாமையில் வசிக்கும் ஆதிக்க சமூகத்தை சேர்ந்த ராஜரத்தினம் ஆனந்தராஜ் பச்சையம்மா உள்ளிட்ட பலர் எங்களை அப்பகுதியை விட்டு துரத்த பல்வேறு அச்சுறுத்தல்களையும், இன்னல்களையும் கொடுத்து வந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கள் வீட்டிற்கு வந்த ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள் தன்னையும், பாட்டி சுருட்டையம்மாளை தாக்கியதோடு ஆடைகளை கிழித்து கொடுமைப்படுத்தியதாக தெரிவித்தார்.
தாக்கப்பட்டது குறித்து கேட்ட போது, வீட்டின் அருகே இருந்த வாழை மரங்களை ஆதிக்க சாதியினர் வெட்டியுள்ளனர்.குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து தன்னை மிரட்டியதாக கூறினார்.
தங்களுக்கு நடந்த வன்கொடுமை குறித்து சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட வர்களை, காவல் நிலையத்திற்கு அழைத்த போதும் வராமல் இருந்துள்ளனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் முருகனிடம் புகார் மனு கொடுத்துள்ளார். தன்னிடம் புகார் வாங்கிய பின்பு, கிராம நிர்வாக அலுவலர் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக செயல்பட்டு தன்னை மிரட்டுவதாக குற்றம் சாட்டினார்.

சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஆதிக்க சாதியினரிடமிருந்து உரிய பாதுகாப்பும், பட்டாவும் வழங்க புகார் மனு அளித்தனர். மனுவை வாங்கிக்கொண்ட ஆட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேசி அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு, பட்டா கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டதாக நம்மிடம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுவன் விஜய பிரபாகரன் பேசும்போது கொஞ்ச நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வெளியே சாப்பிட்டு கொண்டு இருக்கும்போது, ஒரு பாட்டி,அவருடன் வந்த இரு ஆண்கள் தங்கள் சாப்பாட்டில் மலத்தை வீசியதாக தெரிவித்தார். பாட்டி மற்றும் அம்மாவை அடித்ததோடு ஆடையை கிழித்ததாகவும் குற்றம் சாட்டினார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். ஆட்சியரிடம் புகார் எழுதி கொடுத்ததாகவும், அவர் அதிகாரிகளிடம் பேசியுள்ளதாக கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் அடங்குவதற்குள் தற்பொழுது சேலம் மாவட்டத்தில் உணவில் மலம் கலந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.