- நெல்லையை சேர்ந்த முத்துராஜ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தனது மகன் முருகன் என்ற மருதுவை கண்டுபிடித்து நேரில் ஆஜர்படுத்த உத்தரவிடக் கூறி மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி கார்த்திகேயன், “மனுதாரர் குண்டாஸ் வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், குண்டாஸை ரத்து செய்து, அவரை நேரில் ஆஜர்படுத்துமாறு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குண்டாஸை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் அதன் தமிழாக்க நகல் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இவ்வாறு குண்டாஸ் பிறப்பிக்கப்படும் வழக்குகளில் அதன் தமிழாக்க நகல் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, குறிப்பிட்ட காலங்களுக்கு உள்ளாக வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியதோடு, உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கை பொறுத்தவரை முருகனுக்கு எதிராக பதியப்பட்ட குண்டாஸ் வழக்கு ரத்து செய்யப்படுகிறது.

குண்டாஸ் பிறப்பிக்கப்பட்டதற்கான தமிழாக்க நகலை வழங்காததே, பல வழக்குகளில் குண்டாஸ் ரத்து செய்யப்படுவதற்கு காரணமாக அமைகிறது. ஆகவே உயர்நீதிமன்ற மதுரை பதிவாளர் பொறுப்பு தலைமை நீதிபதி முன்பாக இந்த விவகாரத்தை முன்வைக்கவும், தமிழக உள்துறையின் துணைச்செயலாளர் தமிழக காவல்துறை தலைவர் ஆகியோர் இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க பொறுப்பு தலைமை நீதிபதி அறிவுறுத்துமாறு, கோரிக்கை விடுக்கிறோம்.
தென்மண்டல காவல்துறை தலைவர் இது தொடர்பாக ஆலோசிக்க செப்டம்பர் 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு நீதிமன்றம் வரவும் அறிவுறுத்தியுள்ளனர்.