ராயப்பேட்டை உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோயிலின் ராஜ கோபுரத்துக்கு சேதம் ஏற்படாமல் மெட்ரோ பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் நுழைவு கோபுரத்தை, 5 மீட்டர் கோவில் உள்புறம் தள்ளி வைத்து, பணிகள் முடிந்ததும் மீண்டும் பழைய இடத்தில் வைக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை மெட்ரோ திட்டத்தின் 2ம் கட்ட பணிகளுக்காக, ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள நுாறாண்டு பழமையான ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோவில் ராஜ கோபுரத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஆலயம் காப்போம் கூட்டமைப்பு சார்பில் வழக்கு தொடரபட்டிருந்தது.
இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமாருடன் விசாரணை செய்த நீதிபதி கே.குமரேஷ்பாபு, தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.ரவி, வி.ராகவாச்சாரி ஆகியோருடன் கடந்த 3ம் தேதி கோவிலை பார்வையிட்டார்.
இந்த நிலையில் வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, துர்க்கை அம்மன் கோவில் நுழைவு கோபுரத்தை, 5 மீட்டர் கோவில் உள்புறம் தள்ளி வைத்து, மெட்ரோ பணிகள் முடிந்ததும் மீண்டும் பழைய இடத்தில் வைக்கப்படும் எனவும்,
மெட்ரோ பணிகள் நடக்கும் காலங்களில், பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர வசதியாக, 4 மீட்டர் சுற்றளவுக்கு மாற்று பாதை அமைத்து தரப்படும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல ரத்தன விநாயகர் கோவில், தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு, பணி முடிந்ததும் அறநிலையத் துறையால் கண்டறியப்பட்ட இடத்தில் மெட்ரோ நிர்வாகம் கோவிலை கட்டி தரும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது.
மெட்ரோ ரயில் நிலைய நுழைவு, வெளியேறும் பாதை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன வளாகத்தில் மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட மாற்று திட்டத்தை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.