- குட்கா முறைகேடு வழக்கில் அனைத்து ஆவணங்களும் காகித வடிவில் வழங்ககோரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் தடையை மீறி குட்கா பொருட்கள் விற்றதாக டெல்லி சிபிஐ காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்பட 26 பேருக்கு எதிராக கூடுதல் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி,வி.ரமணா மற்றும் முன்னாள் டிஜிபிக்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட குற்ற சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் உத்தரவாதத்தை தாக்கல் செய்தனர்.
வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், மின்னனு முறையில் இல்லாமல் காகிதத்தில் வழங்க வேண்டும் என வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவிற்கு, சிபிஐ தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யபட்டது.
அந்த பதில் மனுவில், பழைய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் தற்போது அமலில் உள்ள பிஎன்எஸ் சட்டத்தின் படி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு காகிதம் வடிவில் மட்டுமே ஆவணங்களை வழங்கவேண்டும் என தெரிவிக்கபடவில்லை. ஆவணங்களை வழங்க வேண்டும் என்று தான் உள்ளது.
குற்றபத்திரிகை, கூடுதல் குற்றப்பத்திரிக்கை, சாட்சிகள் பட்டியல், சான்று ஆவணங்களின் பட்டியல் ஆகியவை மட்டுமே காகித வடிவில் வழங்குவதாகவும், மற்ற வழக்கு ஆவணங்கள் மின்னனு சாதனங்கள் (பென்-ரைவ்) மூலம் வழங்குவதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்த வழக்கில் 26 குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருப்பதால், பெரிய எண்ணிக்கையிலான ஆவணக்கள் உள்ளதால், மின்னனு வடிவில் வழங்குகிறோம் என தெரிவிக்கபட்டிருந்தது.
எனவே அனைத்து ஆவணங்களையும் காகித வடிவில் வழங்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கை வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் உள்ளதால் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கபட்டிருந்தது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/chennai-special-court-acquits-teenager-arrested-for-smuggling-ganja-to-sell-to-college-students/
நீதிபதி, இந்த பதில் மனுவிற்கு குற்றம் சாட்டபட்டவர்கள் தரப்பில் வாதங்களை முன் வைக்க விசாரணையை டிசம்பர் 20ம் தேதி தள்ளி வைத்தார்.