ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது தகுதிச்சுற்றுப் போட்டியில், நடப்புச் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் தோனி தலைமையிலான சிஎஸ்கே 10-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் தடம் பதித்துள்ளது. நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிவில், புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்த குஜராத் – சென்னை அணிகள், முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் மோதின.
இருந்த போதும் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் கண்ட சென்னை அணியில், தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக 60 ரன்கள் விளாசி சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

அடுத்து வந்த ஷிவம் துபே ஒரு ரன்னில் வெளியேறினார். ரகானே 17 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் டிவோன் கான்வே 40 ரன்களில் பெவிலியன் திரும்பினார். கடைசி கட்டத்தில் சற்று அதிரடியாக ஆடிய ஜடேஜா 22 ரன்கள் சேர்த்தார். முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 குவித்தது.
இதையடுத்து, 173 ரன்கள் என்ற இலக்கை குஜராத் அணி துரத்தியது. ஆனால், ஷுப்மன் கில் தவிர எஞ்சிய வீரர்கள், சென்னை அணியின் நேர்த்தியான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஷுப்மன் கில் 42 ரன்களில் வெளியேறியதும், சிஎஸ்கே ஆதிக்கம் செலுத்தியது.

இருந்த போதும் கடைசி கட்டத்தியில் ரஷித் கான், தனது வழக்கமான அதிரடியால் மிரட்டினார். அவரும் 30 ரன்களில் நடையை கட்டியதால் ஆட்டம் சென்னையின் வசம் முழுமையாக வந்தது. கடைசி பந்தில் முகமது ஷமி ஆட்டமிழந்ததும், குஜராத் அணி 157 ரன்களுக்கு ஆல்-அவுட்டனது. நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை சிஎஸ்கே வெல்வது இதுவே முதல் முறையாகும். நேற்றைய 15 ரன்கள் வெற்றியின் மூலம் சென்னை அணி, நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இப்போட்டியில் 44 பந்துகளில் 60 ரன்கள் விளாசிய ருதுராஜ் , ஆட்டநாயகனாக தேர்வானார். மேலும், ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி தலைமையில் 14-வது தொடரில் களம் கண்டுள்ள சிஎஸ்கே, பத்தாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. ஏற்கனவே நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 5-வது முறையாக மகுடம் சூடுமா என்ற எதிர்பார்ப்பு சி.எஸ்.கே. ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.