அதிதீவிர புயலான பிபர்ஜாய், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகம் அருகே கரையைக் கடந்தது. இந்த நெருக்கடியின் போது எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களுக்குத் தேவையான உதவியை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மேற்கொண்டனர்.
எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தி, அவர்களது உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்கும் நோக்கத்தோடு செயல்படும் இந்த அமைப்பின் நிவாரண முகாமில் துமாரி மற்றும் வாலாவரிவந்த் கிராமங்களைச் சேர்ந்த 150 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குடிநீர், உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசிய வசதிகள் அனைத்தும் அவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ளன.
விரைவு நடவடிக்கை குழுக்களின் துரித பணிகளால் ஏராளமான விலைமதிப்பற்ற மனித உயிர்கள் பாதுகாக்கப்பட்டன. பொதுமக்களைக் காக்கும் பணியில் எல்லைப் பாதுகாப்பு படை ஈடுபடுவது இது முதல் முறை அல்ல. குனாவ் கிராமத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 100 பேரை இதற்கு முன்பு இந்த அமைப்பு தனது முகாமில் தங்கி வைத்து அவர்களைப் பாதுகாத்தது, குறிப்பிடத்தக்கது.