குடியாத்தம் அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்து நெல் பயிர், தக்காளி தோட்டம், டிராக்டர் முதலியவற்றை சேதம் செய்த காட்டு யானையை கிராம மக்கள் பட்டாசு வெடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கதிர்குளம் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் . இந்த கிராமத்தில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். கதிர்குளம் கிராமம் வனப்பகுதியை ஓட்டிய காடுகள் சூழ்ந்த கிராமம் ஆகும் .
விவசாயத்தையே நம்பி வாழ்வாதாரத்தை நடத்தி வரும் இக்கிராம மக்களுக்கு தொடர்ந்து யானை, சிறுத்தை,மான், காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் விவசாய நிலத்தை சேதப்படுத்துவது அதிகரித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனை தொடர்ந்து நேற்று இரவு விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று ராஜ் என்பவருக்கு சொந்தமான தக்காளி தோட்டம் மற்றும் வேர்க்கடலை தோட்டத்தை சேதப்படுத்தி உள்ளது.மேலும் பாலாஜி என்பவருடைய நெல் பயிர் மற்றும் விவசாய நிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை சேதப்படுத்தி உள்ளது.
மேலும் பிச்சாண்டி கௌரி என்பவருக்கு சொந்தமான நெல் மற்றும் மாமரங்கள் சேதப்படுத்தி உள்ளது.விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானையை விரட்ட சென்றபோது காட்டு யானை கிராம மக்களை துரத்தி வந்ததாகவும் கிராம மக்கள் ஒன்றிணைந்து பட்டாசுகள் வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டியதாகவும்.
வனத்துறையிடம் தகவல் பலமுறை தகவல் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் கிராம மக்கள். கடன் வாங்கி விவசாயம் செய்து வரும் கதிர்குளம் கிராமமக்கள் வனவிலங்குகளால் சேதப்பட்டு வருவதால் கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்படுவதாகவும் வனவிலங்குகள் சேதப்படுத்தும் பயிர்களுக்கு தமிழக அரசு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் எனும் கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் சோலார் மின்வெலியை அமைத்து விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும் தமிழக அரசுக்கு கிராம மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்காலிக நடவடிக்கையாக வெடிவைத்து யானைகளை விரட்டியுள்ள கதிர்குளம் கிராமமக்கள் அவர்களுக்கு நிரந்தர தீர்வாக வனத்துறையினர் உடனடி தலையீடல் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்