கிராமோற்சவம் விளையாட்டு நிகழ்ச்சி மூலம் இளைஞர்களின் திறமைகள் மேம்படும் – மத்திய அமைச்சர்

0
65

‘ஈஷா கிராமோத்வசம்’ எனும் மாபெரும் கிராமிய விளையாட்டு திருவிழாவின் நிறைவு நாள் போட்டிகள் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தென்னிந்திய அளவிலான இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சத்குரு மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் பேசுகையில், கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக ஈஷா யோகா நிறுவனம் சார்பில் கிராமோற்சவம் விளையாட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளதாகவும், இதன் மூலம் கிராமப்புறத்தில் உள்ள இளைஞர்களின் திறமைகள் மேம்படும் எனவும் குறிப்பிட்டார்.

கிராமோற்சவம் விளையாட்டு நிகழ்ச்சி

மேலும், இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுக்களான கபடி, களரி மற்றும் மல்கம் ஆகிய விளையாட்டுக்கள் ஒலிம்பிக் போட்டிகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து சர்வதேச விளையாட்டுகளுக்கான வீரர் வீராங்கனைகளை உருவாக்க டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் மூலம் உதவித்தொகை உட்பட அனைத்து செலவுகளும் அரசால் ஏற்கப்பட்டு தரமான விளையாட்டு வீரர்கள் உருவாக்கப்படுவதாகவும் கூறினார். குறிப்பாக, பெண்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு சீரிய முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இந்த ஆண்டுக்குள் நாடு முழுவதும் ஆயிரம் கேலோ விளையாட்டு மையங்கள் திறக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆண்களுக்கான வாலிபால் போட்டி, பெண்களுக்கான த்ரோபால் போட்டி, இருபாலாருக்குமான கபடி போட்டிகள் என 4 பிரதான போட்டிகளின் இறுதிப் போட்டிகள் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியில் இருந்து தேர்வாகியுள்ள அணிகளின் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இன்று நடைபெற்ற வாலிபால் இறுதிப் போட்டியில் சத்குரு மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோர் களத்தில் விளையாடி ஆட்டத்தை துவக்கி வைத்தனர்.

கிராமோற்சவம் விளையாட்டு நிகழ்ச்சி

தொழிலாளிகள், விவசாயம் மற்றும் மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்கள் என வித்தியாசமான பின்புலங்களில் இருந்து வந்து விளையாட்டு வீரர்களாக மாறியவர்கள் என்பது இத்திருவிழாவின் சிறப்பாகும்.

மேலும், இந்நிகழ்வில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை, திரைப்பட நடிகர் சந்தானம் ஆகியோரும் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

இப்போட்டிகளை காண்பதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஈஷாவிற்கு வந்திருந்தனர்.

இறுதிப் போட்டியில் முதலிடம் பெற்ற வாலிபால் அணிக்கு ரூ. 5 லட்சம், த்ரோபால் அணிக்கு ரூ.2 லட்சம், ஆண்கள் கபடி அணிக்கு ரூ. 5 லட்சம், பெண்கள் கபடி அணிக்கு ரூ.2 லட்சம் என பரிசு தொகைகளும், பாராட்டு கேடயங்களும் வழங்கப்பட்டது.

ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கிய 15-வது ஈஷா கிராமோத்சவம் திருவிழாவில் சுமார் 60,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அதில் சுமார் 10,000 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here