வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின்கட்டண உயர்வினை அரசு திரும்ப பெற வேண்டும்: சீமான்

3 Min Read
சீமான்

வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின்கட்டண உயர்வினை தமிழ்நாடு அரசும், ‘மின்நுகர்வோர் விதிமுறை திருத்தங்களை’ இந்திய ஒன்றிய அரசும் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று  சீமான் வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,”இன்று முதல் (சூலை-1, 2023) வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டணத்தை அலகு ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் தொழில் நிறுவனங்களும், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் குடிமக்களும் பகலில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு ஒருவித கட்டணமும், இரவில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு 25% வரை அதிக கட்டணமும் செலுத்த வேண்டுமென இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு ‘மின்நுகர்வோர் விதிமுறைகளில்’ புதிய திருத்தங்களைக் கொண்டுவந்து வரி என்ற பெயரில் மக்களை வாட்டிவதைக்க முடிவெடுத்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசும் தன் பங்கிற்கு மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது எதேச்சதிகாரப்போக்காகும்.

மின் மீட்டர்

ஏற்கனவே மக்கள் விலைவாசி உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு் வாழ்வா? சாவா? நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலையில், மக்களை மேலும் மேலும் கசக்கிப்பிழியும் விதமாக மின்கட்டணத்தை கடுமையாக உயர்த்துவது என்பது கொடுங்கோன்மையாகும்.

மின்விளக்குகளின் தேவையும், பயன்பாடும் பகல் நேரத்தைவிட இரவில்தான் மிகவும் அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் மின் விளக்குகளின் தேவை மிகக்குறைவு என்பதோடு, அலுவல் காரணமாக மக்கள் வீட்டைவிட்டு வெளியில் சென்றுவிடுவதால் மின் பயன்பாடும் மிகக்குறைவாகவே இருக்கும். ஆனால் நேரத்திற்கேற்ப மின்கட்டணம் செலுத்தும் புதிய விதிமுறையின்படி காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு 25% வரை அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. எனவே மக்கள் அதிகமாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் நேரத்திற்கான கட்டணத்தை உயர்த்தி, அதன் மூலம் அதிக மின்கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், திட்டமிட்டே இத்திருத்தங்களை பாஜக அரசு கொண்டுவந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

ரீடிங்

இதுவரை பின்பற்றப்பட்ட கட்டணமுறையை மாற்றி ‘நேரத்திற்கு ஏற்ப மின்கட்டணம்’ என்ற முறையை பாஜக அரசு நடைமுறைப்படுத்த முயல்வது நாட்டு மக்களின் மின்சாரப் பயன்பாட்டைத் தடுப்பதோடு மட்டுமின்றி, பெரு நிறுவனங்களுக்கு ஏற்படும் மின்பற்றாக்குறையைப் போக்கி, அவர்களின் மின்தேவையை முழுவதுமாக நிறைவு செய்கின்ற ஒன்றிய அரசின் வியாபார சூழ்ச்சியும் இதில் அடங்கியுள்ளது என்பதும் தெளிவாகிறது.

குடிமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப மின் உற்பத்தியை அதிகப்படுத்தி வழங்க வேண்டியது ஆளும் அரசுகளின் அடிப்படை கடமையாகும். அதனைவிடுத்து, வளர்ச்சி என்ற பெயரில் பன்னாட்டுப் பெருநிறுவனங்களை சிவப்புக் கம்பளம் விரித்து நாட்டிற்குள் அனுமதித்துவிட்டு அவற்றின் மின்தேவையை நிறைவு செய்வதற்காக, குடிமக்கள் தங்களுக்கான மின்பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள, நேரத்திற்கேற்ப மின்கட்டண முறையை நடைமுறைப்படுத்த துடிப்பது பாஜக அரசின் நிர்வாகத் திறமையின்மையே வெளிக்காட்டுகிறது.

ஏற்கனவே, மோடி அரசு கொண்டுவந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, பணமதிப்பிழப்பு ஆகியவற்றால் உள்நாட்டு சிறுகுறு தொழில்முனைவோர்கள் பெரும் நட்டத்திற்கு ஆளாகியுள்ள சூழ்நிலையில், நேரத்திற்கேற்ப மின்கட்டண முறையானது அத்தொழில்களை அடியோடு அழித்தொழிக்கவே வழிவகுக்கும். எனவே, நேரத்திற்கேற்ப மின்கட்டண நிர்ணயம் என்பது தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் இலாபமீட்ட மட்டுமே உதவுமேயன்றி, நாட்டு மக்களுக்கு துளியளவும் பயன்படபோவதில்லை. மின்சாரம் என்பது மக்களுக்கு அரசு செய்கின்ற சேவை என்பதிலிருந்து, அதிக இலாபம் தரும் வியாபார பண்டமாக மோடி அரசு மாற்ற முயல்வது வெட்கக்கேடானது.

சீமான்

தமிழ்நாட்டு மக்களுக்கு நேரத்திற்கேற்ப மின்கட்டண முறையால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்ற தமிழ்நாடு மின்வாரியத்தின் விளக்கம், பாஜகவின் சதித்திட்டத்திற்கு திமுக அரசும் துணைபோகிறது என்பதையே காட்டுகிறது. ஒன்றிய அரசின் நிர்பந்தமே மின்கட்டணத்தைக் கடுமையாக உயர்த்த காரணம் என்று கூறும் திமுக அரசு, நேரத்திற்கேற்ப மின்கட்டண முறையையும் தற்போதைக்கு ஆதரித்துவிட்டு, எதிர்காலத்தில் ஒன்றிய அரசை கைகாட்டி, தமிழ்நாட்டில் அதனை நடைமுறைப்படுத்தவும் கூடும். எனவே ஒன்றிய பாஜக அரசின் மின்நுகர்வோர் விதிமுறை திருத்தங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய திமுக அரசு அதனை செய்யத் தவறியதோடு, தன் பங்கிற்கு, வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின்கட்டணத்தை உயர்த்துவதென்பது தொழில் நிறுவனங்களை முற்றாக முடக்கவே வழிவகுக்கும்.

ஆகவே, நேரத்திற்கேற்ப மின்கட்டணம் என்ற பெயரில் நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் ‘புதிய மின்நுகர்வோர் விதிமுறை திருத்தங்களை’ இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், இன்று முதல் நடைமுறைப்படுத்தபட்டுள்ள வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின்கட்டண உயர்வினை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share This Article
Leave a review