டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள குருவை சாகுபடிக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க த.மா.கா. வலியுறுத்துகிறது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது முகநூல் பதிவில்,”காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்திரவுப்படி, தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை, கர்நாடகா அரசு முறையே கொடுக்க தவறிய காரணத்தினால் விவசாயிகள் மிகவும் மனக் கஷ்டத்திலும், பொருளாதார நஷ்டத்திலும் இருக்கிறார்கள்.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில், கடந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும், போதுமான தண்ணீர் கடை, மடை பகுதிகளுக்கு வந்து சேரவில்லை. இதனால் குறுவை சாகுபடி பெரும் அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது.
விவசாயிகளின் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கருகிப் போயிருப்பதாக கண்ணீர் வடிக்கிறார்கள். எனவே விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க தமிழக அரசு பாதிக்கப்பட்ட பயிர்களுக்குப் பதில், மறு விவசாயம் செய்யவும், சம்பா சாகுபடிக்கு உடனே தயாராகும் வகையில், சம்பா தொகுப்புத் திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட குருவை நெற்பயிர்களுக்கான இழப்பீடு மற்றும் நிவாரணம் தொகையை காலதாமதம் இல்லாமல் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்துகிறது. இது டெல்டா விவசாயிகளின் அவசிய, அவசர பிரச்சனை, ஆகவே வேளாண் காப்போம், விவசாயிகளின் நலன் காப்போம்” என்று கூறியுள்ளார்.