தமிழகத்தில் தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனையை, தமாகா கடுமையாக எதிர்க்கிறது. தமாகா இளைஞர்அணி சார்பில் எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்தவுள்ளது என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,” வெவ்வேறு ரூபத்தில் மது விற்பனையை அரசு துவங்கியுள்ளது. அதாவது சென்னை, கோயம்பேடு சி.எம்.பி.டி பேருந்து நிலையத்தில் தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனையை துவங்கியுள்ளது. இச்செயல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. தமிழக அரசு இளைஞர்களை தவறான வழிக்கு அழைத்து செல்வது மிகவும் கண்டிகதக்கது.
மூச்சுக்கு மூச்சி திராவிட மாடல் என்று சொல்லும் திமுக அரசின் திராவிட மாடல் இதுதானா?. எங்களது திறமையான ஆட்சியை இந்தியாவே திரும்பி பார்க்கிறது என்று முதல்வர் பெருமையாக கூறுவது இதைதானா?. தங்களின் ஆட்சியையும், பேச்சையும் மக்கள் உற்று நோக்கி கொண்டு இருக்கிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிட வேண்டாம்.
ஏழை எளிய, நடுத்தர மக்களையும், இளைஞர்களையும் சீரழிக்க, தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனையை துவங்கியுள்ள தமிழக அரசின், இந்த பிற்போக்கான திட்டத்தை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ், இளைஞர் அணியின் சாற்பில் கையெழுத்து இயக்கம் நடத்தவுள்ளது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.