10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குக! டிடிவி தினகரன்

2 Min Read
டிடிவி

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று பத்து ஆண்டுகளுக்கு மேல் பதவி நியமனத்திற்காக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணி நியமனம் செய்யப்படாமல் இருக்கும் சுமார் 40 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தங்களை 2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நியமனத் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைக்கு திமுக அரசு செவி சாய்க்காத நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த 410 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கும், தமிழக அரசுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்

2018-ம் ஆண்டுக்கு முன்பாக பின்பற்றப்பட்ட ஆசிரியர் நியமன நடைமுறையின்படியே அப்போது நடைபெற்ற தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை பின்பற்றி வழக்கு தொடுத்தவர்கள் மட்டுமல்லாது 2018 ஆம் ஆண்டுக்கு முன்பாக நடைபெற்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருக்கும் அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட வேண்டும் என ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

எனவே, தங்களின் பணிக்காலத்தின் பாதி காலத்தை போராட்டங்களிலேயே கழித்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் அனைவருக்கும் விரைந்து பணி நியமன ஆணைகளை வழங்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review