- சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, அவரது பெற்றோர், பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவன் மீது அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றிருக்கின்றனர். அப்போது காவல் ஆய்வாளர் தங்களை தாக்கியதாகவும், சிறுவனின் பெயரை புகாரிலிருந்து நீக்க வற்புறுத்தியதாகவும் சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட்டிருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. அதேபோல, இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த இரண்டு வழக்குகளும் நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம்,வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடியோ வெளியானது தொடர்பாக யூடியூபர் மாரிதாஸ் மற்றும் பத்திரிகையாளர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் , பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றது யார்? எங்கு வைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர்,பெண் ஆய்வாளர் அவரது செல்போன் மூலம் மருத்துவமனையில் வைத்து பதிவு செய்யப்பட்டதாக கூறினார். உடனடியாக வழக்குப் பதிவு செய்வதற்காகவே மருத்துவமனையில் வைத்தே வாக்குமூலம் பெறப்பட்டதாக கூறினார்.
அப்போது , அந்த காவல்துறை ஆய்வாளர் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் , இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக கூறினார். இதனையடுத்து , போக்சோ வழக்கை விசாரிக்கும் போலீசாருக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் வழக்கின் விசாரணையை உயர் அதிகாரிகள் மேற்பார்வை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை பாதுகாக்க வேண்டும் எனவும் இது போன்ற புகார் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டனர். இந்த வழக்கை பொறுத்தவரை போக்சோ விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனை லிப்ட் அருகே வைத்து வாக்கு மூலம் பதிவு செய்தது தவறு எனவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் முறையாக நடத்தப்படவில்லை எனவும் நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
இந்த வழக்கில் காவல்துறை விசாரணை மீது பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டது அவர்கள் தரப்பு வாதங்கள் மூலம் தெரிய வருவதாகவும் அதற்கு உரிய காரணம் இருப்பதாக தாங்கள் நம்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/florida-snake-scare-hard-rock-casino-evacuated-after-2-explosive-devices-found/
இதனையடுத்து , இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதிகள் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்க்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் காவல்துறைக்கு உத்தரவிட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கூடுதல் இழப்பீடு பெறுவது குறித்து பெற்றோர் உரிய நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.