எரிவாயு கிணறு கசிவு! ஓ.என்.ஜி.சியின் அலட்சியப் போக்கிற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கண்டனம்

4 Min Read
கசிவு குழாய்

 

- Advertisement -
Ad imageAd image

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சேந்தமங்கலம் ஊராட்சி பெரியக்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 2 எண்ணெய் கிணறுகளை அமைத்து இருந்தது. பெரியகுடி கிராமத்தில் மூடப்பட்ட ஒரு எண்ணெய் கிணற்றில் இருந்து அதிகளவில் கியாஸ் கசிந்தது. எண்ணெய் கிணற்றில் இருந்து கியாஸ் கசிந்து வருவதால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

இதில் ஒரு கிணற்றில் 2013-ம் ஆண்டு அதிக அழுத்தம் காரணமாக கியாஸ் வெளியேறியது. இதனால் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் அச்சம் அடைந்து எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இந்த எண்ணெய் கிணறுகள் மூடப்பட்டன. ஆனால் கிணறுகள் அறிவியல் முறைப்படி நிரந்தரமாக மூடப்படவில்லை. 2023 ஜூன் மாதத்திற்குள் நிரந்தரமாக மூடுவதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் 2022-ம் ஆண்டு ஒஎன்ஜிசி நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் சொன்னபடி ஓ.என். ஜி.சி. நடந்து கொள்ளவில்லை.

பேரா.ஜெயராமன்

திருவாரூர் மாவட்டத்தில் எண்ணெய் – எரிவாயு கிணறுகளில் இருந்து கசிவுகள் ஏற்படுவதும் தற்காலிகமாக அவை சரி செய்யப்படுவதும் ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகின்றன. பெரும் ஆபத்துகள் ஏற்பட்டு பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் எப்போதும் காத்திருக்கிறது.

30.06.2021 அன்று, திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் சிவகுமார் என்ற விவசாயியின் வயலில் ஓ.என்.ஜி.சி யின் எண்ணெய்க் குழாய் உடைப்பு ஏற்பட்டு, ஒரு ஏக்கர் நிலம் பாழாகியது. இந்த குழாய் உடைப்பை ஓஎன்ஜிசி உடனடியாக சரி செய்யவும் இல்லை.

வெள்ளக்குடி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்குச் செல்லும் இந்த ஓஎன்ஜிசியின் எண்ணெய்க் குழாய் 19 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இத்தகையஎண்ணெய்க் குழாய்கள் அரித்துப்போய், விபத்துகளை ஏற்படுத்தக் கூடியவையாக இருந்து வருகின்றன.

ஓ என் ஜி சி குழாய்

திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி, குடவாசல், கோட்டூர், போன்ற இடங்களில் நூற்றுக்கணக்கான எண்ணெய் கிணறுகள் ஓ.என்.ஜி.சி-யால் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, கசிவுகள் திருவாரூர் மாவட்டத்தையே நாசம் செய்து வருகின்றன.

கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி, ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகளில் இருந்து வெள்ளக்குடி செல்லும் கச்சா எண்ணெய்க் குழாயில் எருக்காட்டூரில் தனசேகரன் என்பவரின் வயலில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு ஏக்கர் நிலம் பாழானது.

2018 பிப்ரவரி 15-ஆம் தேதி திருவாரூர் பாண்டவை ஆற்றின் கீழே அமைக்கப்பட்டிருக்கும் ஓஎன்ஜிசி யின் எண்ணெய்க் குழாயில் பெரிய அளவில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு, ஆற்றுநீர் பெருமளவில் பாழானது.

2019ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் எருக்காட்டூர் பகுதியில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு இருந்த செல்வராஜ் என்பவரின் நிலம் முழுவதும் ஓஎன்ஜிசி குழாய் உடைப்பால் கச்சா எண்ணெய் நிரம்பிப் பாழானது.

குழாய்

ஓ.என்.ஜி.சி.யின் எண்ணெய்க் கிணறுகளிலிருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு வயல்கள் பாழாவது வாடிக்கையாகிவிட்டது. குழாய்கள் செல்லக்கூடிய வயல்களுக்கு வாடகை என்ற பெயரில் ஒரு சிறு தொகையைக் கொடுத்துவிட்டு, திருவாரூர் மாவட்டத்தையே ஓ.என்.ஜி.சி நிரந்தரமாகப் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட வயல்களில் ஒ.என்.ஜி.சி புதிய மண் நிரப்பியும் தருவதில்லை. மக்கள் போராடினால் காவல்துறை கைது செய்து விடுகிறது.

2017 ஜூன் 30 ஆம் தேதி, தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் வனதுர்க்கை அம்மன் கோயில் பகுதியில் ஓ.என்.ஜி.சி.யின் எண்ணெய் குழாய் உடைப்பு ஏற்பட்டு, பெருமளவில் எண்ணெய் வெளியேறி, வயல்கள் நாசமான போது, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கதிராமங்கலம் மக்களைத் திரட்டிப் போராடியது. ஆனால் போராட்டக்காரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஒன்றரை ஆண்டுகள் போராட்டம் நீடித்தது. ஆனால், 2019ஆம் ஆண்டு, கதிராமங்கலம் வெள்ளைப் பிள்ளையார் கோயில் தெருவில், விக்கிரமன் ஆற்றுப்படுகையில் குழாய் உடைப்பு மீண்டும் ஏற்பட்டு ஆற்றுப்படுகை பழானது. அதைப்பற்றி ஓ.என்.ஜி.சி கவலைப்படவில்லை.காவிரிப்படுகையின் நிலத்தடி நீரில் கச்சா எண்ணெய் நிரந்தரமாகக் கலந்து, நிலத்தடி நீர் தொகுப்பே பயன்படுத்த முடியாதபடி மாறி வருகிறது. இதுவரை மக்கள் போராட்டங்கள் காவல்துறை உதவியுடன் தடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள்!

(1) காவிரி படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தொடருமா என்ற கேள்வியை தொடர்ந்து நிகழ்ந்து வரும் விபத்துக்கள் எழுப்பியுள்ளன.
2021 -இல், தமிழ்நாடு அரசு, இனி தமிழ்நாட்டில் எந்த எண்ணெய் – எரிவாயு கிணறும் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உண்மையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும் என்றால்,
தொடர்ந்து படுகையைப் பாழாக்கிக் கொண்டிருக்கும் பழைய எண்ணெய் – எரிவாயுத் திட்டங்களும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பழைய எண்ணெய் – எரிவாயுக் கிணறுகள் மூடப்பட வேண்டும். எண்ணெய்க் குழாய்களெல்லாம் தோண்டி எடுக்கப்பட்டு நீக்கப்படவேண்டும் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

(2) காவிரி படுகையை எண்ணெய் எரிவாயுத் திட்டங்கள் எந்த அளவிற்கு பாதித்துள்ளன என்பது குறித்து ஆய்வு செய்த பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் குழுவின் ஆய்வறிக்கை கடந்த 17.02. 2022 அன்று சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

பேரா.ஜெயராமன்

(3) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை தொடர்ந்து பாதுகாக்க தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை வெளியிட வேண்டும்.

(4) காவிரிப் படுகையின் அனைத்து மாவட்டங்களும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.

இக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.என ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.செயராமன் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a review