கர்நாடகாவில் மு.க.ஸ்டாலின் படத்திற்கு இறுதி சடங்குகள் செய்தது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகாவில் பாரதிய ஜனதாவின் ஆதரவு பெற்ற ஒரு குழு காவிரி நீர் பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் படத்தை வைத்து அவருக்கு இறுதி சடங்குகள் செய்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தைப் பொறுத்தவரை காவிரி ஒழுங்காற்று ஆணையமும், உச்சநீதிமன்றமும் என்ன தீர்ப்பு சொல்லியிருக்கிறார்களோ, அந்த தண்ணீரை நாம் கேட்கிறோம். நீரின்றி பயிர்கள் கருகுகின்றன. தமிழக விவசாயிகள் சொல்லொணா துயரம் அடைகிறார்கள்.
ஆனாலும் தமிழக மக்களும், தமிழக விவசாயிகளும், தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும் எல்லை மீறாமல், உணர்ச்சியை தூண்ட விடாமல் பொறுப்பான தன்மைகளோடு நம்முடைய கோரிக்கையை வைத்து வருகிறோம். ஆனால், கர்நாடகத்தில் வேறு விதமாக இருக்கிறது.
அங்கிருக்கிற பாரதிய ஜனதா இதை அரசியலாக்கும் முயற்சியில் இரண்டு மாநில மக்களுக்கிடையே வன்மத்தையும், வன்முறையையும் தூண்டிவிட முயற்சிக்கிறது. தமிழகத்தில் கூட விவசாயிகள் சங்கம் ரயில் மறியல் செய்தார்கள். அதில் வன்முறை நிகழாமலும், அதேநேரத்தில் எல்லை மீறிய ஒருசிலரை மற்றும் அதன் தலைவரை காவல்துறை கைது செய்து தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டது.
இதேபோன்ற ஒரு நிலைமை கர்நாடகத்திலும் வர வேண்டும். அனைத்து கட்சிகளும் அரசியல் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். கர்நாடக மாநில அரசு வன்முறையில் ஈடுபடுகிறவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.